தமிழ்நாடு

2 மணி நேரத்தில் 692 பேர் மீது வழக்குப்பதிவு - வாகன ஓட்டிகளிடம் வேலூர் போலீஸ் அதிரடி

2 மணி நேரத்தில் 692 பேர் மீது வழக்குப்பதிவு - வாகன ஓட்டிகளிடம் வேலூர் போலீஸ் அதிரடி

webteam

வேலூரில் இரண்டு மணி நேரம் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார் 692 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதையொட்டி வேலூரில் இருந்து செல்லும் காட்பாடி சாலையில் காவல்துறையினர் இன்று திடீரென சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சாலை சந்திப்பின் நான்கு புறமும் நின்று ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்தனர். இதேபோல் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த நபர்களையும் பிடித்து அபராதம் விதித்தனர்.

நவீன கையடக்க கருவி மூலம் அபராத தொகையை வசூலிக்கப்பட்டது. ஹெல்மெட் வைத்துக் கொண்டே அதை அணியாமல் வந்த நபர்களுக்கு காவல் துறையினரே தலைகவசத்தை அணிந்து விட்டனர். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என தலைகவசம் அணியாமல் வந்த அனைவரையும் வழிமறித்து அபராதம் விதித்தனர்.

தலைகவசம் அணியாத அனைவருக்கும் உடனடியாக தலா 100 ரூபாய் அபராதம் விதித்தனர். தலைகவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சிறப்பு வாகனத் தணிக்கையில் 692 பேர் மீது ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதது ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.