வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொலைந்த மற்றும் திருட்டு போன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்பி மணிவண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி அகியோர் கலந்து கொண்டு சுமார் ரூ.40,47,000 மதிப்புடைய 210 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிஐஜி முத்துச்சாமி பேசுகையில், “தொலைந்த மற்றும் திருட்டு போன செல்போன்களை கண்டுபிடிக்க செல்போன் ட்ராக்கர் என்ற 9486214166 வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் 821 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அதன்படி கடந்த ஜூலை மாதம் 162 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக 40,47,000 மதிப்புடைய 210 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கொலை, கொள்ளை முயற்சி, திருட்டு போன்ற குற்ற செயல்கள் வேலூர் காவல் சரகத்தில் குறைந்துள்ளது. ஆனால் விபத்துகள் 4 சதவீதம் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. விபத்துகள் ஏற்படாத வண்ணம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 106 இடங்கள் விபத்துகள் நடக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் போலீசார் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
போக்சோ வழக்குகளில் அக்கறை செலுத்தி வருகிறோம். இந்த வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படுகிறது. போக்சோ வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத மற்றும் விசாரணை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர்களை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து வருகிறோம். இந்த வழக்கில் உரிய கவனம் செலுத்தாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு மண்டல ஐ.ஜி.யின் இமைகள் திட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குழந்தைகள் தொடர்பாக வரப்பெறும் மனுக்கள் குறித்து விசாரணை செய்வதில் தாமதம் ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி வருகிறோம். அவ்வாறு தாமதம் ஏற்படுத்தினாலோ, கட்ட பஞ்சாயத்து செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளச்சாராயம் விற்பனை குறைந்து வருகிறது. வேலூர் மாவட்டம் கள்ளச்சாராம் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். 34 சோதனை சாவடிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சரகத்தில் ஒரு நாளைக்கு 20 முதல் 25 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சத்துவாச்சாரியை சேர்ந்த சுடர்கொடி என்ற கல்லூரி மாணவியின் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. செல்போனை பெற்றுக் கொண்ட அவர் காவல்துறைக்கு நன்றியை தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனது தந்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது படிப்புக்கு உதவியாக செல்போன் வாங்கிக் கொடுத்தார். ஆனால், அவர் அடுத்த சில மாதங்களிலே இறந்துவிட்டார். அவரது நினைவாக எனது செல்போனை பயன்படுத்தி வந்தேன்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நான் கல்லூரிக்கு பேருந்தில் சென்றபோது, எனது செல்போன் திருடு போனது. இதையடுத்து செல்போனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்திருந்தேன். தந்தையின் நினைவாக வைத்திருந்த செல்போன் காணாமல் போனதால் நான் மன வருத்தத்தில் இருந்து வந்தேன். இந்த நிலையில் எனது செல்போனை காவல்துறையினர் மீட்டு கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.