பணம் கொடுத்த தம்பதி pt
தமிழ்நாடு

வேலூர்: 11 லட்சம் கடன் வாங்கியவர் மரணம்.. பணத்தை திரும்ப பெறமுடியாத விரக்தியில் தம்பதி விபரீதமுடிவு!

வேலூரில் 11 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியவர் மரணித்த நிலையில், கடனை வசூலிக்க முடியாத விரக்தியில் தம்பதியர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - ச.குமரவேல்

வேலூர் அடுத்த சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன் - மாலதி தம்பதியர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு ரூபாய் 11 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளனர். கடனை பெற்ற கண்ணன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கொடுத்த பணத்தை முருகேசனும் அவரது மனைவி மாலதியும் கண்ணனின் வீட்டிற்கு சென்று குடும்பத்தாரிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்கள், "நீங்கள் பணம் கொடுத்தது எங்களுக்கு தெரியாது. பணம் எதுவும் எங்களால் கொடுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளனர்.

கடிதம் எழுதிவிட்டு தற்கொலை!

இதனால் விரக்தி அடைந்த முருகேசன் - மாலா தம்பதி நேற்று தங்கள் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தகவல் அறிந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாலா - முருகேசன் தம்பதி

மேலும் காவல் துறையினர் முருகேசன் வீட்டில் சோதனை செய்தபோது கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாகவும், அதில் அத்தம்பதியினர் ‘கண்ணன் என்பவருக்கு கொடுத்த பணத்தை அவர்களின் குடும்பத்தாரிடமிருந்து பெற முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என எழுதி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதிய தம்பதியின் இந்த முடிவு, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.