அணைக்கட்டு Twitter
தமிழ்நாடு

வேலூர்: ‘ரோடும், ஆஸ்பத்திரியும் இருந்திருந்தா பிள்ளைய காப்பாத்திருக்கலாம்’ பாம்பு கடித்த குழந்தை பலி

சாலை வசதி இருந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

PT WEB

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, அல்லேரி மலைக் கிராமத்துக்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி விஜி. இவரது மனைவி பிரியா. இவர்களின் ஒன்றரை வயது குழந்தையான தனுஷ்கா நேற்று இரவு வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டு இருந்த போது அவரை பாம்பு கடித்துள்ளது.

இரவு நேரம் என்பதால் அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து பாம்பு, குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து உறங்கிக் கொண்டு இருந்த குழந்தையை கடித்துள்ளது என சொல்லப்படுகிறது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு எழுந்து பார்த்த பெற்றோர், பாம்பு கடித்ததை அறிந்து பதறியுள்ளனர்.

உடனடியாக அணைக்கட்டு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஆனால் சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரம் ஆகியுள்ளது. அப்போது விஷம் உடல் முழுவதும் பரவி குழந்தை செல்லும் வழியிலேயே இறந்துவிட்டது.

அணைக்கட்டு

இறந்த தங்கள் குழந்தையுடன் மருத்துவமனை சென்றுள்ள அவர்களின் நிலை பற்றி பின்னர் தகவலறிந்த அணைக்கட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல போதிய வசதி இல்லாமல் பாதி வழியிலேயை ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி விட்டுள்ளனர் ஊழியர்கள். இதனையடுத்து சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் பிள்ளையை எடுத்துச் சென்றுள்ளார்கள் அவர்கள். பின் உடலை கால்நடையாக சுமார் 10 கி.மீ தூரம் மலைப்பகுதிக்கு கையால் தூக்கி சென்றுள்ளனர்.

அணைக்கட்டு

சாலை வசதி இல்லாததால்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே குழந்தை இறந்தது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இம்மலைகிராமத்தில், மருத்துவ வசதியும் இல்லையென்பது இன்னும் கொடுமை. மேலும் கையாலேயே குழந்தையின் சடலத்தை பெற்றோர்கள் தூக்கிச் செல்லும் அவல நிலையும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு உரிய சாலை வசதியை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்நிலையில், அல்லேரி மலைக் கிராமத்தில் சாலை துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தற்போது உறுதியளித்திருக்கிறார்.