anganwadi center pt desk
தமிழ்நாடு

வேலூர்: அங்கன்வாடி மையத்தை மதுக்கூடமாக்கி கும்மாளம் போட்ட இளைஞர்கள் - வட்டார வளர்ச்சி அலுவலர் புகார்

அங்கன்வாடியில் பார் அமைத்து சினிமா ரீ கிரியேட் செய்த விவகராம் தொடர்பாக இளைஞர் மீது காவல் நிலையத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்துள்ளார்.

webteam

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூர் அலமேலுமங்காபுரம் அடுத்த வெங்கட்டாபுரம் பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், மதுகூடமாக மாற்றி பார் போல் செட் செய்து மது குடிப்பது, புகைபிடிப்பது, ரவுடிகளோடு கும்மாளம் அடிப்பது போன்ற காட்சிகளை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

Reels

அந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாக ஊட்டச்சத்து உணவருந்தி, விளையாடும் மையத்தில் இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்தபோது, அந்த வீடியோ ஒரு சினிமா காட்சி போல் செட் செய்து ரீல்ஸ் எடுத்ததாகவும். இதனை முன்னின்று செய்தவர் வேலூர் திமுக ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் என்பவரின் மகன் சரண் தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீதும், அரசு கட்டிடத்தை தவறாக பயன்படுத்தி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நபர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார்.