தமிழ்நாடு

வேலூர்: நீச்சல் பழகச் சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

வேலூர்: நீச்சல் பழகச் சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

kaleelrahman

நீச்சல் பழகச்சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

வேலூர் தொரப்பாடி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் காதர்பாஷா. கூலி வேலை செய்துவரும் இவருடைய 12 வயது மகன் ஆதில்பாஷா. இவர், தொரப்பாடி பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், விடுமுறையில் இருந்த ஆதில்பாஷா ஆடு மேய்த்து வந்துள்ளார்.


இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற ஆதில்பாஷா, மாலை நேரமாகியும் வீடு திரும்பாததால் அவருடைய பெற்றோர் ஆதில்பாஷாவை தேடிச் சென்றுள்ளனர். அப்போது தொரப்பாடி ஏரிக்கரை ஓரம் ஆடுகள் மேய்ந்த நிலையில், அருகே உள்ள கிணற்றில் அவன் எடுத்து சென்ற 5 லிட்டர் கேன் மிதந்த நிலையில், அவன் உடுத்தி இருந்த உடை கரை மீது இருந்துள்ளது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாதாள கொலுசு போட்டு உடலை தேடிவந்தனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதாலும் தண்ணீர் அதிகம் இருப்பதாலும் தேடுவதை நிறுத்திவிட்டு தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியை நாடுவதாக கூறியுள்ளானர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மோட்டர் மூலம் தண்ணீரை வெளியேற்றி இரவு முழுவதும் தேடி இன்று அதிகாலை மாணவன் உடலை மீட்டுள்ளனர். இதனால் தீயணைப்புத் துறையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.