தமிழ்நாடு

வேலூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு

வேலூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு

kaleelrahman

வேலூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேலூர் அருகே அரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ஹேமலதா (47). இவர் கடந்த 2004-ம் ஆண்டு அரசு மருத்துவராக பணியில் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சைதாப்பேட்டையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் இறுதி வாரத்தில் மருத்துவர் ஹேமலதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த 43 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் நேற்று முன் தினம் (06.07.2021) திடீரென உடல்நிலை மோசமானதால் வேலூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையான சிஎம்சி-யில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்றிரவு இரவு ஹேமலதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த மருத்துவர் ஹேமலதா ஆரம்ப காலகட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் கோவிசீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டார். பின்னர் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தி கொண்டுள்ளார். இருப்பினும் அவருக்கு சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்ததாகவும், அவருக்கு நோய் தொற்று மிக தீவிரமாக இருந்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூரில் கொரோனாவுக்கு அரசு மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 2 செவிலியர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.