மைக்ரோ ஜெராக்ஸூடன் மாணவர்கள் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி புதிய தலைமுறை
தமிழ்நாடு

வேலூர் | “12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பிட்” - ஆதாரத்துடன் இன்ஸ்டா ஸ்டோரி போட்ட அரசுப்பள்ளி மாணவர்!

12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் "பிட்" எடுத்துச் சென்று எழுதியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பிட்-உடன் மாணவர்கள் சிலர் வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 11 மற்றும் 15 ஆம் தேதிகளில் கணக்குப் பதிவியல், பொருளியல் பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தான் "பிட்" எடுத்துச் சென்றதாக கூறி, அதனை பள்ளி வளாகத்தில் இருந்தே போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர் ஒருவர் ஸ்டோரிகளாக பதிவிட்டுள்ளார்.

மைக்ரோ ஜெராக்ஸூடன் மாணவர்கள் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி

ஒவ்வொரு ஃபோட்டோவுக்கும் ஒரு பாடல் என ஓடவிட்டு, பின்னனியில் தனுஷ் நடித்த வி.ஐ.பி படத்தின் ‘வாட் எ கருவாடு’ பாடல், பொல்லாதவன் பட ‘படிச்சுபார்த்தேன்’ பாடல் போன்றவற்றை வைத்துள்ளனர். கூடவே நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார் அம்மாணவர்.

அந்த அதிர்ச்சி இன்ஸ்டா ஸ்டோரிகள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தேர்வுக்கு மாணவர்கள் பிட் எடுத்து செல்லும் இந்த போக்கு, மாணவர்களின் கல்வித் தரத்தையும், ஒழுக்கத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளது என கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பின் தெரிவிக்கிறோம்” என கூறினார்.