வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இருக்கிறது. இதில் ஒன்றாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியை வகுப்பறை ஜன்னலில் சரடு மூலம் கட்டி வைத்து ஆசிரியர்கள் கொடுமைப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் ஒரு புகைபடம் பரவியது. இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்ட போது, “இது முற்றிலும் தவறான தகவல்” என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “மாணவி பள்ளிக்கு செல்லாததாலும், வீட்டுக்கு ஓடி வந்துவிடுவதாலும், மாணவியின் தாயே ஜன்னலில் அவரை கட்டி வைத்துள்ளார். இதனை கண்டித்த ஆசிரியை உடனே கட்டை அவிழ்த்துவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதுதொடர்பாக மாணவியின் தாயிடம் நேரடியாக நாம் கேட்ட போது, “எனது மூத்த மகள்தான் இவள். எனக்கு கைக்குழந்தையும் இருப்பதால், மூத்த மகளை அங்கன்வாடிக்கு சரியாக அனுப்ப முடியவில்லை. இதனால் நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர்த்துள்ளோம். ஆனால், பள்ளியிலிருந்து அடிக்கடி வீட்டிற்கு ஓடி வந்து விடுவாள். குறுக்கே சாலையும், வீட்டின் அருகே கிணறும் இருக்கிறது. இதனால் அச்சப்பட்ட நான் 10 நாட்களுக்கு அவளுடன் பள்ளி வளாகத்திலேயேதான் இருந்தேன். அவள் பள்ளியிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சரடை எடுத்து அவள் கையில் சுற்றி வைத்து அதை ஜன்னலில் கட்டினேன்.
அவள் கைகளை நான் கட்டவில்லை. அவளை பயமுறுத்தி படிக்க வைக்கவே இதனை செய்தேன். இதை கண்டித்த அங்கிருந்த ஆசிரியை உடனே கட்டை அவிழ்க்க சொல்லி விட்டார். என்னோட வாழ்க்கைதான் படிக்காமல் இப்படி ஆகிடுச்சு... என் மகளாவது படிக்க வேண்டும் என இதை செய்தேன். அதற்குள் எனது குழந்தையை போட்டோ எடுத்து தவறாக போட்டுவிட்டார்கள். இப்போது நாங்கள் நிம்மதி இழந்து தவிக்கிறோம். இவர்கள் பொய்யாக தகவல் பரப்ப எனது குழந்தைதான் கிடைத்ததா?” என வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோர், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை, வட்டார கல்வி அலுவலர் ஆகியோரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி நேரில் விசாரணை மேற்கொண்டார். தற்போது, துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.