செய்தியாளர் - ராஜாராம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அளக்குடி ஊராட்சியைச் சேர்ந்தது வெள்ளைமணல் என்ற மீனவர் கிராமம். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளடக்கிய வரைபடம், இதுவரை அரசால் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது.
ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள இந்த வீடுகளில் வெள்ள காலங்களில் ஆற்று வெள்ளம் புகுவதால், ஊர் அருகாமையில் வீடுகள் கட்டிக்கொள்ள அம்மக்கள் முயல்கின்றனர். ஆனால் அக்கிராமமே அங்கீகரிக்கப்படாததால், வனத்துறையினர் வீடுகட்ட அனுமதி அளிக்க மறுக்கின்றனர்.
மேலும், வனத்துறை இடம் என்பதால் இங்கு சாலை வசதியும் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பலமுறை அம்மக்கள் மனுவும் அளித்துள்ளனராம்.
வனத்துறை ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறி தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை கூட்டத்தில் பங்கேற்று, உடனடியாக தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தரக்கோரி மனு அளித்தனர்.
இந்திய வரைபடத்தில் வெள்ளைமணல் கிராமம் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், “தேர்தல் நேரத்தில் வாக்குகேட்டு வரும் வேட்பாளர்கள் வாக்குறுதி மட்டும் அளித்து விட்டு, அதனை நிறைவேற்றித்தராததால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம். மேலும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகிய அரசு ஆவணங்கள் அனைத்தையும் அரசிடமே ஒப்படைக்க உள்ளோம். இதுதொடர்பான மனுவை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் அளித்துள்ளோம்” என்றுள்ளனர்.
சிட்டிசன் படம் போன்று இந்திய வரைபடத்தில் தங்களது கிராமம் இல்லை எனக்கூறி, ‘எங்களுக்கான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம்’ என்ற கிராம மக்களின் அறிவிப்பு சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.