தமிழ்நாடு

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி திருவிழா - லட்சக்கணக்கானோர் வழிபாடு

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி திருவிழா - லட்சக்கணக்கானோர் வழிபாடு

webteam

புகழ்பெற்ற நாகை மாவட்ட வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கன்னி பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முன்னதாக புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியே எடுத்துவரப்பட்டு பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்துவைத்தார். சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடி உச்சியை அடைந்ததும், ஒரே நேரத்தில் ஆலயத்தின் விளக்குகள் ஏற்றப்பட்டு, வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியதேர் பவனி அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெறுகின்றது. ஆண்டுப்பெருவிழாவை முன்னிட்டு, 10 நாட்களும் நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணை ஆசிர், கொங்கனி, மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெறுகின்றன.