சென்னை வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடியில் மொத்தமுள்ள 548 வாக்குகளில் 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியது.
தொகுதிக்குட்பட்ட டி.ஏ.வி. பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அவ்வப்போது வேட்பாளர்களும் சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டனர். ஆயினும், தொடக்கம் முதலே வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்ட நிலையில் இரவு 7 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. அப்போது மொத்தமுள்ள 548 வாக்குகளில் 186 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது.
6ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது மொத்தம் 220 வாக்குகள் பதிவாகியிருந்தது. தேர்தல் முடிந்து பணியாளர்கள் விவிபேட் இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டுச்சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. வேட்பாளர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 92ஆவது எண் வாக்குச்சாவடிக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகளை பாதுகாப்பு மையங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.