தமிழ்நாடு

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படும் வாகனங்கள்..!

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படும் வாகனங்கள்..!

Rasus

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் இரண்டாவது நாளாக சுங்கச்சாவடி கட்டணம் இல்லாமல் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பரனூரில் சுங்கச்சாவடி உள்ளது. அவ்வழியே திருச்சிக்குச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றின் ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அரசுப் பேருந்து ஓட்டுநரையும் நடத்துநரையும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், பேருந்தை சுங்கச்சாவடிக்கு குறுக்கே நிறுத்தியதால் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நீண்ட வரிசையில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் காத்திருந்தன. இதனையடுத்து பல்வேறு பேருந்துகளில் பயணித்தவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த கணினி உள்ளிட்ட மின்சாதன பொருள்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டு வாகனங்கள் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் நாராயணன், நடத்துநர் பசும்பொன் முடியரசன் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் குல்தீப் சிங், விகாஸ் குப்தா ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுங்கச்சாவடியில் உள்ள அனைத்து கணினிகள், கட்டண இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒரு மணி முதல் தற்போது வரை தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படுகின்றன.

மீண்டும் சுங்கச்சாவடியை பழைய நிலைமைக்கு கொண்டு வர அதிகப்பட்சமாக ஒரு வாரம் வரை ஆகலாம் என்றும் அதுவரை கட்டணம் வசூலிப்பது சாத்தியமில்லை என்றும் சுங்கச்சாவடி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். சுங்கச்சாவடியில் இலவசமாக பயணிப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்