புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ நிகழ்ச்சி பதினோராவது ஆண்டாக பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ராணிப்பேட்டை இந்து வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் ’வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2024’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், 100க்கும் மேற்பட்ட படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பு எஸ்.பி.மதிவாணன், மாவட்டக் கல்வி அலுவலர் விஜயகுமார், தனியார் பள்ளிகளின் மாவட்ட அலுவலர் செந்தில்குமார், பள்ளித் தாளாளர் உதயகுமார், பள்ளி முதல்வர் பூங்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை கௌரவிக்கும் வகையில் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில் உரையாற்றிய மாவட்ட பொறுப்பு எஸ்.பி. மதிவாணன், “பதினெட்டு வயதிற்கும் குறைவான மாணவ மாணவிகள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இதை மாணவர்களும் தங்கள் பெற்றோருக்கு எடுத்துக் கூற வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இளநிலைப் பிரிவில், TLLM International School, ராணிபேட்டையைச் சேர்ந்த மாணவர் எஸ்.லக்கிஷ் முதல் பரிசை வென்றார். முதுநிலைப் பிரிவில், BALSAM Academy ராணிபேட்டையைச் சேர்ந்த மாணாக்கர்கள் ச.நிதின் மற்றும் ம.ஸ்ரீகாந்த் முதல் பரிசை வென்றனர்.
வெற்றியாளர்களை ராணிபேட்டை மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் பள்ளியின் முதல்வர் கிருத்திகா நிவேதிதா பரிசளித்து கௌரவித்தனர். நிகழ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ்களும், கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.