தமிழ்நாடு

'ஜூலை வரை சமாளிக்கலாம்': சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் வீராணம் ஏரி!

'ஜூலை வரை சமாளிக்கலாம்': சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் வீராணம் ஏரி!

webteam

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை ஜூலை மாதம் வரை சமாளிக்க வீராணம் ஏரி உதவும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்

வடகிழக்குப் பருவமழை பொய்த்துபோனதால் சென்னையில் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை. சென்னை குடிநீருக்கு ஆதாரமான ஏரிகள் எல்லாம் காய்ந்து மேய்ச்சல் நிலங்களாக மாறிவிட்டன. ஃபோனி புயலால் மழை பெய்து தண்ணீர் பிரச்னையில் இருந்து சென்னை தப்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் ஏமாற்றியது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டம் அடிபாதாளத்துக்கு சென்றுவிட்டது. தற்போது சென்னையே தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளது. குறைந்தது ஜூலை வரையாவது கோடை நிலவும் என்பதால், சமாளிப்பது எப்படி என நினைத்து சென்னை மக்கள் விழி பிதுங்குகின்றனர்.

இந்நிலையில் சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை ஜூலை மாதம் வரை சமாளிக்க வீராணம் ஏரி உதவும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு 2013ம் ஆண்டு கோடையில் தான் வீராணம் ஏரி நிரம்பியது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ளது வீராணம் ஏரி. பாசனவசதி மற்றும் சென்னைக்கு குடிநீர் ஆகியவைதான் வீராணம் ஏரியின் பிரதானம். கடந்த மார்ச் மாதம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. சென்னை குடிநீர் பற்றாக்குறையை கணக்கிட்டு வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி ஏப்ரலில் நீர் திறக்கப்பட்டது. அதன்படி தற்போது வீராணம் ஏரியில் 6000 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. இது தவிர கீழணையில் 1160 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை ஒருநாளைக்கு 15 மில்லியன் கன அடி நீர் வீராணம் ஏரியில் இருந்து கொண்டுவரப்படுகிறது. எதிர்வரும் மாதத்தில் வீராணம் ஏரியில் நீர் குறைந்தாலும் கீழணையில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.