பொதுமுடக்கதால் விற்பனை இன்றி தேங்கிக்கிடக்கும் 2000-க்கும் மேற்பட்ட வீணைகள். உற்பத்தியை முழுமையாக தொடங்க முடியாமல் கைவினைக் கலைஞர்கள் தவிக்கின்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோவில், தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு, தஞ்சாவூர் ஓவியம் போன்றே தஞ்சாவூர் வீணையும் உலகப் புகழ்பெற்றது. கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப் பெற்றுள்ள தஞ்சாவூர் வீணையை சரஸ்வதி வீணை அல்லது ரகுநாத வீணை எனவும் கூறுவதுண்டு. பல மாநிலங்களில் வீணைகள் செய்யப்பட்டாலும், தஞ்சாவூரில் செய்யப்படும் வீணை தனித்தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசுப் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்த வீணையின் விலை குறைந்தது ரூ.25,000 முதல் ரூ.80,000 வரை உள்ளது. இக்கலையை நம்பி தஞ்சையில் ஏறத்தாழ 150 கைவினைக் கலைஞர்கள் உள்ளனர். ஒவ்வொரு கலைஞரும் மாதத்துக்கு 30 முதல் 40 வீணைகள் தயார் செய்வர். இத்தொழில் மூலம் நாள்தோறும் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 முதல் 1,000 வரை வருவாய் கிடைத்து வந்தது.
ஆனால், கொரோனா பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு பொது முடக்கத்தை அறிவித்தது இதனால் பெரும்பாலான கலைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிறிது மீண்டுவந்த நிலையில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக இத்தொழிலைச் சார்ந்த கலைஞர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
வெளியூர்களிலிருந்து காரில் வீணை வாங்க வருபவர்கள் தாங்களே கொண்டு செல்வர். கார் வசதி இல்லாத பெரும்பாலானவர்கள் பேருந்து அல்லது ரயிலில்தான் கொண்டு செல்வது வழக்கம். இப்போது, பொது போக்குவரத்து முழுமையாக செயல்பாட்டிற்கு வராததால் தயார் செய்யப்பட்ட வீணைகளை கொண்டு செல்ல முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன.
இதேபோல தஞ்சையில் செய்யப்படும் வீணைகள் அமெரிக்கா இங்கிலாந்து சிங்கப்பூர் மலேசியா துபாய் ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முழுமையாக விமானப் போக்குவரத்தும் இல்லாததால் வெளிநாடுகளுக்கும் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர். வருவாய் கிடைக்காததால், அடுத்து புதிய வீணைகளையும் செய்ய முடியவில்லை என்று கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ந.காதர் உசேன்