வேதா இல்லத்தின் மதிப்பீட்டு தொகை ரூ.68 கோடி என எதன் அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகை ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியதன் மூலம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் அரசுடைமையானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், உரியவர்கள் இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா "வேதா இல்லம் இழப்பீட்டு தொகையை சிவில் நீதிமன்றத்தில் அரசு செலுத்தியுள்ளது. அது எங்கள் பூர்விக சொத்து என முதலிலிருந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன், சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். வேதா இல்லம் 68 கோடி ரூபாய் என்று ஏதன் அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்துள்ளது ? மதிப்பீடு தொகை தவறானது. நாங்கள் இன்னும் வேதா இல்லம் உள்ளே சென்று என்ன பொருள் இருக்கிறது, அதன் மதிப்பு என்ன என மதிப்பீடு செய்யவில்லை" என்றார்.
மேலும் "சட்டப் பூர்வமாக நீதிமன்ற எங்களை வாரிசு தாரராக அறிவித்துள்ள நிலையில் எங்களுக்கே உரிமை உள்ளது. வேதா இல்லத்திற்குள் இருக்கும் பொருட்களை பட்டியலிட்டு அரசு ஏன் வெளியிடவில்லை. பட்டியல் அரசிடம் உள்ளதா ? எங்களின் அனுமதி இல்லாமல் அந்த பட்டியலை தயார் செய்ய முடியாது. செய்தால் அது குற்றமாகும். சட்டத்தை அரசு கடைபிடிக்கவில்லை. சுயநலத்திற்காக ஜெயலலிதா பெயர் மற்றும் சொத்துக்கள் பயன்படுத்தபடுகிறது" என குற்றச்சாட்டுகளை ஜெ.தீபா முன்வைத்துள்ளார்.