விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர்களின் குடும்பத்தினரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து, அவர்களது நிலை குறித்து கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு தங்கள் கட்சியின் சார்பாக அவர், 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய அவர், "மதுக்கடையை திறந்து வைத்துள்ள அரசே, சாராயம் குடித்துவிட்டு இறந்தவர்களுக்கு இழப்பீடு தருவது ஏற்புடையதல்ல" என்று தெரிவித்தார்.
முன்னதாக சென்னையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறவுள்ள மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய திருமாவளவன், “திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுக என அனைத்து கட்சிகளுக்கும், மது விலக்கு கொள்கையில் உடன்பாடு உள்ளது. எனவே, எங்கள் மாநாட்டில் அதிமுக கூட பங்கேற்கலாம்” என்றார்.
மேலும், தனது அழைப்பை தேர்தலோடு சம்பந்தப்படுத்த வேண்டாம் என திருமாவளவன் கூறினாலும், திமுக கூட்டணியில் உள்ள அவர், தங்கள் மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்திருப்பதும், கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அரசு இழப்பீடு தருவது ஏற்புடையதல்ல என கூறியிருப்பதும், தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.