செய்தியாளர்: பிரியா ராஜேந்திரன்
ஆதவ் அர்ஜுனாவின் கருத்து திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். அதேசமயம், அடுத்தடுத்த தேர்தல்களில் யாருடன் கூட்டணி என்பது குறித்தும் அவர் ட்விஸ்ட் வைத்துள்ளார்.
“நேற்று வந்தவர்கள் துணை முதலமைச்சர் ஆவதாக கூறுகிறார்கள். எங்கள் தலைவர் ஏன் இதுவரை ஆகவில்லை?” என்றுகூறி, ஏற்கெனவே தான் அளித்த பேட்டி குறித்த கேள்விக்கு, மீண்டும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா.
“கூட்டணி கட்சிகள் இன்றி தனித்து திமுகவால் வெற்றியை ஈட்டி இருக்க முடியாது” என்ற ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தே கண்டன குரல்கள் ஒலித்தன. அக்கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ரவிக்குமார், மற்றொரு துணை பொதுச் செயலாளர் வன்னியரசு ஆகியோர் தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.
திமுகவிலிருந்து கண்டன குரல் எழுப்பிய எம்.பி. ஆ.ராசாவுக்கு, புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியின் மூலம் ஒரு கேள்வியையும் முன் வைத்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. அந்த விவரத்தை இங்கே காணலாம்:
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா-வின் பேச்சு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், “மிக முக்கியமான கருத்தை வெளியிட்டு இருக்கிறார் அவர். அதில், கட்சி கூட்டணி மற்றும் மக்கள் நலனுக்கு ஏற்ப முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது” எனக் கூறி, ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார் திருமாவளவன். இதையடுத்து திமுக - விசிக கூட்டணி தொடருமா, அல்லது உட்கட்சியில் ஏதேனும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.