“எந்தச் சூழலிலும், எந்த காலத்திலும் ஒரு தலித் மாநில முதலமைச்சராக முடியாது. இதை விவாதித்தால் நாடாளுமன்றத்தோடு இந்த அதிகாரம் இணைக்கப்பட்டிருக்கிறது எனப் புரியும்.
நமக்கு திமுக அரசின் மீது நம்பிக்கை உள்ளது சரி. ஆனால், திமுக அரசு என்பது நிலையானது இல்லை. மாநில அரசுதான் நிலையானது. ஆகவே, எந்தச் சூழலிலும் ஒரு தலித்தை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழல் இங்கே இல்லை. அது வரவும் முடியாது“ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி பேசியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
``பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு’’ என்கிற தலைப்பில், பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விசிக சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று (ஆக.13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விசிக-வின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன்,
``உத்தர பிரதேசத்தில் முன்பு மாயாவதி முதல்வராக இருந்தார். அதன் பிறகு, இந்தியாவில் எந்தச் சூழலிலும், எந்த காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், ஏன் நாடாளுமன்றத்துடன் இந்த அதிகாரம் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். நமக்கு தி.மு.க. அரசு மீது நம்பிக்கை இருப்பது சரி. ஆனால், தி.மு.க. அரசு என்பது நிலையானது அல்ல. மாநில அரசு தான் நிலையானது. கட்சிகள் வரும் போகும். அது வேறு.
சமூக நீதி மீது நம்பிக்கையுள்ளவர்கள் வருவார்கள், போவார்கள். அது வேறு. மாநில அரசுகளில் எந்த சூழலிலும் ஒரு தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் நிலை இங்கே இல்லை, வர முடியாது. இந்தியாவிலேயே பட்டியலின சமூகத்தினரில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் பஞ்சாப். அங்கு எஸ்.சி., எஸ்.டி., மட்டும் 32 சதவீதம் பேர் உள்ளனர். அவ்வளவு பேர் கொண்ட சமூகம், தனித்த அரசியல் சக்தியாக எழுச்சிப்பெற்றால், அவர்கள்தான் நிரந்தர முதல்வராக இருக்க முடியும். ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் போதும் எஸ்.சி., எஸ்.டி., கணக்கெடுப்பும் சேர்த்தே நடத்தப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு வி.சி.க. ஆதரவு தெரிவிப்பது ஓ.பி.சி. பிரிவினருக்காக தான். இதிலிருந்து வி.சி.க, ஓ.பி.சி.க்கு ஆதரவானவர்களா இல்லையா என்பதை புரிந்து கொள்ளுங்கள்’’ எனப் பேசியிருந்தார்.
திருமாவளவனின் இந்தக் கருத்து தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி கார்த்திக் சிதம்பரம், “தலித்தை முதல்வராக ஏற்றுக்கொள்ளும் சமூக சூழல் இங்கே உருவாகவில்லை என்கிற திருமாவளவனின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்” எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ, “அண்ணன் திருமாவின் கருத்தை ஏற்கிறேன். ஆனால், திமுகவின் மீது நம்பிக்கை இருக்கிறது எனச் சொல்லும் கருத்தை எதிர்க்கிறேன்’’ எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை
ஆந்திராவில் சஞ்சீவய்யா,
பீகாரில் ராம் சுந்தர் தாஸ், போலா பஸ்வான் சாஸ்திரி,
ராஜஸ்தானில் ஜகன்நாத் பகாடியா,
மத்தியப் பிரதேசத்தில் அமர்சிங்,
மகாராஷ்டிராவில் ஷிண்டே,
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி,
பஞ்சாபில் சரண்ஜித் சிங் சன்னி, பகவந்த் மான்சிங்
என ஏழு மாநிலங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வராக இருந்துள்ளனர். இதுமட்டுமன்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் துணை முதலமைச்சர்களாகப் பதவி வகித்துள்ளனர்.
தற்போது, தெலங்கானாவின் துணை முதல்வரான, மல்லு பட்டி விக்ரமார்கா பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். தற்போது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தலித் முதல்வர் என்கிற முழக்கம் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டுவரும் ஒரு விஷயம்தான். “காங்கிரஸ் இன்றைக்குத் தமிழகத்தில் வலிமையாக இருந்திருந்தால், ஒரு தலித் முதல்வர் வந்திருப்பார்” என கடந்த காலத்தில் திருமாவளவனே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
தவிர, "தமிழக அமைச்சரவைகளில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதுமே ஆதி திராவிடர் நலத்துறை அல்லது கால்நடைத்துறை போன்ற முக்கியத்துவம் இல்லாத இலாகாக்களே வழங்கப்படுகின்றன. இது ஒருவகையான அரசியல் பாகுபாடும், மறைமுகமான தீண்டாமையும்தான். அதேபோன்று பொது தொகுதிகளிலும் தலித் வகுப்பினர் வேட்பாளராக நிறுத்தப்படுவதில்லை" எனவும் கடந்த காலங்களில் கருத்துத் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.