விசிக திருமாவளவன் முகநூல்
தமிழ்நாடு

“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு”-வீடியோவை அட்மின் பதிவிட்டிருப்பார் என திருமாவளவன் விளக்கம்

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசிய பழைய வீடியோவானது , விசிக தலைவர் திருமாவளவனின் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியாகி, நீக்கப்பட்டுள்ளது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விசிக தலைவர் திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு பேசிய வீடியோவானது , அவரது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியாகி, நீக்கப்பட்டுள்ளது. பதிவிட்ட உடனே நீக்கப்பட்டது கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இது குறித்த விளக்கத்தினை திருமாவளவன் அளித்துள்ளார்.

மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தது விசிக. இந்த அழைப்பே திமுக - விசிக கூட்டணி குறித்து பெரும் கேள்வியை எழுப்பியிருந்தது. இந்த குழப்பம் ஓய்வதற்குள் தற்போது புதிய சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக மற்றொரு சம்பவம் அரங்கேறி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்க சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை சென்னை வந்தடைந்தார். அப்பொழுது பேசிய அவர், விசிக மாநாடு குறித்து ’இது பொதுப்பிரச்னை.. அரசியல் கூட்டணிகளுக்கு இதில் சம்மந்தமில்லை’ என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து நான் விளக்கம் சொல்ல ஒன்றும் இல்லை என்று பதிலளித்திருந்தார்.

இந்தநிலையில், விசிக தலைவர் திருமாவளவனின் சமூக வலைதளப்பக்கத்தில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசிய பழைய வீடியோவானது , வெளியிடப்பட்டு சிறுது நேரத்திலேயே நீக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது

இந்த வீடியோவில், ”எதிர்த்து பேசக்கூடாது, போராடக்கூடாது, கல்வியில் உயர்ந்துவிடக்கூடாது, உயர்ந்த பதவிக்கு ஆசைப்படக் கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக்கூடாது . தமிழ்நாட்டில் இதற்குமுன் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்தினார்களோ இல்லையோ 2016ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்தியது விசிகதான் அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பது பவர் ஷேர், கூட்டணியில் இடம் வேண்டும் என்பது சீட் ஷேர்

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு இதுதான் 1999ஆம் ஆண்டில் விசிக முன்வைத்த முழக்கம். முதன் முதலில், நெய்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்ற முழக்கத்தை முன்வைத்தேன். அதிகாரத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அதிகாரம் தனிமனிதனுக்கு இல்லை.” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த ட்வீட் பதிவிட்ட சிறுது நேரத்திலேயே டெலீட் செய்யப்பட்டது. மீண்டும் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ, இரண்டாவது முறையாக டெலிட் செய்யப்பட்டது.

இந்தநிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக ... ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு மறைமுகமாக திமுக அரசிடம் கோரிக்கை வைக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில்தான், வீடியோ வெளியிட்டது எனக்கு தெரியாது; அட்மின் பதிவிட்டிருக்கலாம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள திருமாவளவன், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது நீண்டகாலமாக நாங்கள் விடுக்கும் கோரிக்கைதான். வீடியோ வெளியிட்டது எனக்கு தெரியாது. அட்மின் பதிவிட்டிருக்கலாம்.” என்று பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழப்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் படுகொலை செய்யப்பட்டது போன்றவற்றில் விசிக அதிருப்தி அடைந்துள்ளநிலையில், தற்போது வெளியாகி நீக்கப்பட்டுள்ள இந்த வீடியோவானது திமுக - விசிக கூட்டணி உறவு எப்படி உள்ளது? என்ற மிகப்பெரிய சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.