விசிக திருமாவளவன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“எதிர்காலமும் அதிகாரமும் நம்மை நோக்கி வரும்...” - விசிக தலைவர் திருமாவளவன்

PT WEB

சென்னை அசோக் நகரில் நடைபெற்ற திலீபனின் 37 வது நினைவேந்தல் நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வன்னியரசு, ஆளுர் ஷாநவாஸ், பனையூர் பாபு, ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமாவளவன், "மக்களோடு நிற்பவர்களை யாராலும் நசுக்கிவிடவோ, ஒழித்துவிடவோ முடியாது என்பதற்கு இலங்கை தேர்தல் ஓர் எடுத்துக்காட்டு. ஈழத் தமிழர்கள் பிரச்னையின் போது அதிமுகவுடன் இணைந்து விசிக செயல்பட்டது. ஆனால் பின்னர் 2 சீட்டுகள் தருவதாக அதிமுக நம்மை அழைத்த போதும், திமுக கூட்டணிலேயே தொடர்ந்தோம். விடுதலை சிறுத்தைகள் சீட்டுக்காக செல்லும் கட்சி அல்ல

ஆதவ் அர்ஜூனா தெரிவித்த ஒரு கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவர் கட்சிக்கு எது நல்லது என நினைத்தே அப்படி பேசினார். அக்கருத்திலிருந்து வேறுபட்டு, பொதுச்செயலாளர்கள் வேறொரு கருத்தை கூறியதன் காரணம், அவர்கள் கூட்டணி நலனை யோசித்து பேசினர். இங்கே கூட்டணி நலன்தான் முக்கியம். கூட்டணி உடைந்தோ முறிந்தோ போனால் அடுத்தது என்ன என்ற பெரிய கேள்வி நம் முன் உள்ளது. எப்போதுமே Safer zone-ல் இருக்க வேண்டும். அது இல்லையென்றால் பிரச்னைதான்.

வயல்களில் வசிக்கும் எலிகள்கூட, ‘தன்னை ஒருவன் பிடிக்க வருவான் - அவனிடமிருந்து தப்பிக்க தயாராக இருக்கவேண்டும்’ என்ற முன்னேற்பாட்டோடு வியூகம் வகுத்து, வருமுன் காப்பாக ஒன்றுக்கு மூன்று வழிகளை உருவாக்கி வைத்திருக்கும். எலிகளுக்கு இருக்கும் அறிவு, நமக்கும் வேண்டும். எதிர்காலமும் அதிகாரமும் நம்மை நோக்கி வரும், அதுவரை கூட்டணியில் பயணிப்பதே கட்சிக்கு பாதுகாப்பு” எனத் தெரிவித்தார்.