தமிழ்நாடு

கமலாலயத்தில் விசிகவினரை இன்று சந்தித்து பேசுகிறார் அண்ணாமலை?

கமலாலயத்தில் விசிகவினரை இன்று சந்தித்து பேசுகிறார் அண்ணாமலை?

நிவேதா ஜெகராஜா

சென்னை பாஜக அலுவலகத்திற்குச் சென்று விடுதலை சிறுத்தை கட்சி மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன் அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை அண்ணாமலைக்கு வழங்க உள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் தொல்.திருமாவளவனை `அம்பேத்கர் குறித்து என்னுடன் விவாதிக்க நீங்கள் தயாரா?’ என்று கேள்வி எழுப்பயது பேசுபொருளானது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட விசிக மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன் அண்ணாமலையுடன் பேசினார்.

அப்போது பேசிய அண்ணாமலை, “வரும் 26ம் தேதி (இன்று) பாஜக அலுவலகம் வருவும்” என அவருக்கு அழைப்பு விடுத்தார். இந்த உரையாடல் வீடியோ இணையத்தில் வைரலானது.

இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அப்பதிவின்படி “திருமாவளவனின் இடது கை, வலது கை யாராக இருந்தாலும் பாஜக அலுவலகத்திற்கு வந்து அவர்கள் விரும்பும் புத்தகத்தை வழங்கலாம். மேலும் திருமாவளவன் சொல்லும் நாளில் விவாதத்தையும் வைத்துக் கொள்ளலாம். `அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்றக் கூடிய தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்கள்!’ என்பதே விவாதத்தின் தலைப்பு” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, தொல்.திருமாவளவன் கையெழுத்திட்ட இரண்டு புத்தகங்களை இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் விசிக மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன் கொடுக்க உள்ளதாக அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இன்று காலை சரியாக 11.45 மணிக்கு பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு நேரில் சென்று `இந்து மதத்தின் புதிர்கள் - மக்கள் தெளிவுறுவதற்கான ஒரு விளக்கம்’ என்ற அம்பேத்கர் எழுதிய புத்தகத்தையும் `டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் - பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு தொகுதி- 8’ என்ற புத்தகத்தையும் கொடுக்கயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாஜக அலுவலகத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் வரக்கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது. ஏற்கெனவே அம்பேத்கரின் பிறந்த நாளன்று சென்னை கோயம்பேட்டில் பாஜகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. இப்படியான சூழலில் அம்பேத்கர் பற்றிய புத்தகங்களை அண்ணாமலையிடம் விசிக-வினர் வழங்க இருப்பது தமிழக அரசியலில் கவனம் பெறும் விஷயமாக உள்ளது.