தமிழிசை சௌந்தரராஜன் pt desk
தமிழ்நாடு

"மது ஒழிப்பு மாநாட்டில் பேசியது வக்கிரத்தின் அடையாளம்" - தமிழிசை Vs திருமாவளவன் கருத்து மோதல்

திருமாவளவன் இமேஜ் மேடையிலேயே சுக்குநூறாக உடைந்து போய்விட்டது. அவரின் பேச்சு வக்கிரத்தின் அடையாளம் என்று விசிக தலைவர் திருமாவளவனை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக சாடியுள்ளார்.

PT WEB

தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை கொண்டுவர மத்திய அரசு ஒத்துழைக்கிறது:

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் 2ஆம் கட்ட பணிக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருந்த மெட்ரோ 2ஆம் கட்ட பணி விஷயத்தை பிரதமர் மோடி அவசியமாக்கியுள்ளார். மத்திய அரசு, தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று தமிழக வளர்ச்சிக்கும் அடிப்படை கட்டமைப்பிற்கும் முழுவதுமாக ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுபடியும் காண்பிக்கிறது.

திருமாவளவன்

காந்தியை இவர்கள் தினம் தினம் கொன்று கொண்டிருக்கிறார்கள்:

'விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில், காந்தியை தனக்கு பிடிக்காது. அவர் இந்து மத கொள்கையை பின்பற்றியவர். சாகும் போதுகூட ஹரே ராம் என்று சொல்லிதான் இறந்தார் என்று தனது துவேஷத்தை கடுமையாக கக்கியிருக்கிறார் திருமாவளவன். காந்தியை இவர்கள் தினம் தினம் கொன்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆக, எந்தளவிற்கு ஒரு தேசப்பிதாவை கொச்சைப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு மிக மோசமான கருத்துகளை பதிவிட்டிருக்கிறார் திருமாவளவன். அவர் ஒரு நாகரிகமான தலைவர் இல்லை என்பதை நிரூபித்துவிட்டார்.

பெண் தலைவரையோ ஆண் தலைவரையோ இப்படி பேசுவது தவறானது:

இதனைத் தொடர்ந்து, 'அக்கா தமிழிசை நீங்கள் குடிக்க மாட்டீர்கள்; உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போன்றுதான் நானும், எனக்கு அந்த பழக்கம் இல்லை' என உளுந்தூர்பேட்டை மதுஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த தமிழிசை சௌ;ந்தரராஜன், 'பெண் தலைவரையோ ஆண் தலைவரையோ இப்படி பேசுவது என்பது தவறானது. மதுபாட்டிலை திறந்தாராம், ஆனால், டேஸ்ட்டே பண்ணியது இல்லையாம். எவ்வளவு சதவீதம் என்பதை இப்போது வரைக்கும் ஞாபகம் வைத்துள்ள திருமாவளவன், டேஸ்ட்டே பண்ணியது இல்லை என்று தன்னுடைய சுயபிரபலத்தை சொல்வதற்காக என்னை பயன்படுத்திக் கொண்டார். எனக்கு குடிக்கலாம் தெரியாது.

தமிழிசை சௌந்தரராஜன்

காந்திய கொள்கையை மறந்துவிட்டு மாநாடு நடத்துகிறீர்கள்:

திருமாவளவன் நடத்திய மாநாட்டில் பின்னாடி உட்கார்ந்து எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பெரியாரை பின்பற்றுகிறோம், அதனால்தான் பெண்களை போற்றுகிறோம் என்று சொல்கிறீர்கள். ஆனால், பெண் காவலர் ஒருவரை நடத்திய விதத்தை என்னவென்று சொவ்வது. அத்துமீறு, திருப்பி அடி என்றெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு, பிறகு திருப்பிக் குடி என்று சொன்னாலும் சொல்வார்கள். இவர்கள் மாநாடு நடத்தியதே ஒரு டிராமாவுக்குதான். அதைத்தான் நான் சொன்னேன். காந்திய கொள்கையை மறந்துவிட்டு மாநாடு நடத்துகிறீர்கள் என்று சொன்னதை, குடிகாரன் என்று சொன்னதைப் போல் திருமாவளவன் பேசியுள்ளார்.

சுக்குநூறாக உடைந்துபோன திருமாவனவன் இமேஜ்:

ஒரு கீழ்த்தரமான மனசு இருந்தால் வெளிப்பாடு இப்படிதான் வரும். நிஜமாகவே திருமாவளவன் கோபமாக, வேகமாக பேசினாலும் அவர் ஒரு நாகரிகமான அரசியல்வாதி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்றைக்கு மேடையில் அவர் இமேஜ் நுக்குநூறாக உடைந்து விட்டது. இன்னொரு தலைவரை இப்படியெல்லாம் பேச முடியும் என்பது வக்கிரத்தின் அடையாளம் என்றுதான் என்னால் சொல்ல முடியும்' என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.