முத்தமிழ் மாநாடு முகநூல்
தமிழ்நாடு

"கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்” - விசிக, சிபிஎம் கடும் எதிர்ப்பு

ஜெனிட்டா ரோஸ்லின், PT WEB

முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21 தீர்மானங்களில் சில, சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக, அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தமிழ்நாடு அரசின் சார்பாக அனைத்துலக முத்தமிழ் மாநாடு நடைபெற்றது. கடந்த 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த இந்த மாநாட்டில், 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்மாநாட்டில், அறுபடை வீடு திருக்கோயில்களில் முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி, திருவிழாக்கள் நடத்துவது, முத்தமிழ் முருகன் மாநாடு நினைவாக பழனியில் 'வேல்' நிறுவுவது, தமிழ்குடியின் மருத்துவமான சித்த மருத்துவத்தை இனி வரும் காலங்களில் தமிழர் சித்த மருத்துவம் என்று அழைத்திடவும், திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் , மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 21 தீர்மானங்களில் சில, சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக, அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

இந்தவகையில், ’கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன’ என்று விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், "கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்றும் இன்றும் (24-25) நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் இன்று 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள்,

5 ஆவது தீர்மானமாக : “ முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும்;

8 ஆவது தீர்மானமாக : “ விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் ;

12 ஆவது தீர்மானமாக : “ முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.” எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல.

இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது." என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும், தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

அதில், ”மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.