தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஃபாசிச எதிர்ப்பை, நையாண்டி செய்வதன் மூலம், அவருக்கு ஃபாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் உடன்பாடு இல்லை என்று புரிந்து கொள்வதா என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய்யின் மாநாட்டு உரை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், :ஃபாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்புதான்.
ஆனால் விஜய்யோ, ‘அவங்க ஃபாசிசம் என்றால் நீங்க பாயசமா’ என்று பாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார். ஃபாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் விஜய்க்கு உடன்பாடு இல்லை என்று புரிந்து கொள்வதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை முன்னிறுத்துவதாலும், பிளவுவாதத்தை எதிர்ப்போம் என கூறுவதாலும், விஜய் பாஜகவை எதிர்க்கிறார் என்று நாம் புரிந்து கொண்டால், ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏனென்ற கேள்வி எழுகிறது
‘பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல’ ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. 'அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது. ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். ஒட்டுமொத்தத்தில், பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது.” என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.