திருமாவளவன் pt web
தமிழ்நாடு

“25 ஆண்டுகால தொடர் போராட்டத்துக்கு கிடைத்த அங்கீகாரம்” - விசிகவிற்கு மாநில கட்சி அங்கீகாரம்!

Angeshwar G

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை தொடங்கியது. முடிவில், பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 290க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

rahul gandhi, pm modi

INDIA கூட்டணியைப் பொருத்தவரையில், காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், திமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தமாக அந்த கூட்டணி, 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் திமுக 22 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என இருதொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 1 லட்சத்து 3 ஆயிரத்து 554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், விசிக மாநில கட்சி அங்கீகாரம் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “இன்று மாலை 6 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற அழைப்பும் வந்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்க நானும் ரவிக்குமாரும் டெல்லி செல்கிறோம். மக்கள் அகில இந்திய அளவில் INDIA கூட்டணிக்கு பேராதரவை நல்கியுள்ளனர்.

கடந்த முறை 55 இடங்களைக் கூட எட்டமுடியாத நிலையில் இருந்த காங்கிரஸ் தற்போது 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் INDIA கூட்டணிக் கட்சியினரின் வெற்றியும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40/40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை சார்ந்தவர்கள் மக்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை இந்த கூட்டணி உணர்த்துகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள சூழலில், தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக ஒரு மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையத்தின் மூலம் பெறுவதற்கான பெற்றுள்ளோம்.

ஆகவே 25 ஆண்டுகால தொடர் போராட்டத்திற்குப் பின் விசிகவிற்கு இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக சிதம்பரம், விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நன்றி.

விசிக குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சி, பிற சமூகத்திற்கு எதிரான கட்சி என்று திட்டமிட்டே சிலர் பரப்பிய அவதூறுகளையெல்லாம் தவிடுபொடி ஆக்கிவிட்டு, விசிக அனைவருக்குமான கட்சி, ஒட்டுமொத்த தமிழ்மக்களின் நலன்களுக்காக போராடும் இயக்கம் என்பதை அங்கீகரிக்கும் வகையில் மக்கள் இதை வழங்கியுள்ளனர். தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தை வழங்குவதோடு, பானை சின்னத்தை விசிகவிற்கான சின்னமாக ஒதுக்கீடு செய்யும் என்பதையும் நம்புகிறோம்” என தெரிவித்தார்.