ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் pt desk
தமிழ்நாடு

ஐ.ஜ.த-க்கு பிரசாந்த் கிஷோர் விசிக-க்கு ஆதவ் அர்ஜுனா? தமிழ்நாட்டின் P.K-வா ஆதவ் அர்ஜுனா?

தனது அதிரடியான கருத்துக்களால் தற்போது ஊடகங்கள் அடிக்கடி உச்சரிக்கும் நபராக மாறியிருக்கிறார் விசிக துணை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா.

இரா.செந்தில் கரிகாலன்

வியூக வகுப்பாளரான ஆதவ் அர்ஜுனாவின் நடவடிக்கைகள், இந்திய அளவில் பிரபலமான வியூக வகுப்பாளரான பி.கே-வின் நடவடிக்கைகளோடு ஒத்துப் போகின்றன. அவற்றைப் பார்ப்பதற்கு முன்பாக, முதலில் யார் இந்த ஆதவ் அர்ஜுனா என்று பார்ப்போம்.

ஆதவ் அர்ஜுனா

நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்தியவர்களில் இவரும் ஒருவர்!

திருச்சியைப் பூர்விகமாகக் கொண்டவர் ஆதவ் அர்ஜுனா. பின்தங்கிய பொருளாதாரப் பின்புலம் கொண்ட ஆதவ் அர்ஜுனா, அரசியல் மீதான ஈடுபாடு காரணமாக பொலிடிக்கல் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றார். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளைத்தான் திருமணம் செய்திருக்கிறார் இவர். மார்ட்டின் வழியாக, திமுக தலைமைக்கு நெருக்கமாகிறார் ஆதவ் அர்ஜுனா. அதனைத் தொடர்ந்து, 2011-2016 காலகட்டத்தில், ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்தியவர்களில் இவரும் ஒருவரானார். தொடர்ந்து, 2016 தேர்தலில், மற்றொரு வியூக வகுப்பாளரான சுனிலுடன் இணைந்து பணியாற்றினார்.

விசிகவுக்கு தேர்தல் வியூக பணிகளை மேற்கொண்டு வந்த ஆதவ் அர்ஜுனா:

இதைத் தொடர்ந்து, 2019 மற்றும் 2021 தேர்தலில், பிரபல வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து திமுகவுக்காக பணியாற்றுகிறார். பின்னர், திமுக தலைமை குடும்ப நபரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து விலகுகிறார். பின்னர் தன்னுடைய தொழில்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஆதவ் அர்ஜுனா, ‘வாய்ஸ் ஆப் காமன்ஸ்’ (VOICE OF COMMONS FOUNDATION) எனும் தேர்தல் வியூக நிறுவனத்தை உருவாக்கினார். இதையடுத்து விசிகவுக்கு தேர்தல் வியூக பணிகளை மேற்கொண்டு வந்த ஆதவ் அர்ஜுனா, திருச்சியில் நடந்த மாநாட்டில் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின் அவருக்கு கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

தொல்.திருமாவளவன் - ஆதவ் அர்ஜுனா

கூட்டணிக்குள் சர்சையை ஏற்படுத்திய ஆதவ் அர்ஜுனா பேச்சு:

2024 தேர்தலுக்கு முன்பாக, திமுக கூட்டணியில், ஒரு பொதுத் தொகுதி கேட்டது, ஆதவ் அர்ஜுனாவுக்குதான் என்கிற செய்திகளும் வெளியானது. ஆனால், இரண்டு இடங்கள் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருந்தது. தொடர்ந்து, அந்தத் தேர்தலில், சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் இந்த நிறுவனம் தேர்தல் பணிகளில் ஈடுபட்டது. இது ஒருபுறமிருக்க, சமீபத்தில், பிரபல தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்த ஆதவ் அர்ஜுனா, “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லை” எனப் பேசியது, கூட்டணிக்குள் மட்டுமல்லாது விசிகவுக்குள்ளும் அனலைக் கிளப்பியது. கடந்த சில நாள்களாக தமிழக அரசியல் களத்திலும் இவர் பற்றவைத்த நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

பி.கே. என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர்:

ஆதவ் அர்ஜுனாவுக்கு முன்னோடி ஒருவர் இருக்கிறார். அவர்தான் பி.கே. என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர். பீகாரைச் சொந்த மாநிலமாகக் கொண்டவர் பிரசாந்த் கிஷோர். அடிப்படையில் பொறியாளரான இவர், ஐக்கிய நாடுகள் சபையில் பொது சுகாதாரம் சார்ந்த பணிகளில் எட்டு ஆண்டுகள் ஈடுபட்டு வந்தார்.

இவரின் கட்டுரை ஒன்று, குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்க, அவருடன் ஒரு காஃபி சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த சந்திப்பின் முடிவிலேயே அவர் மோடியின் படையில் ஒருவராக மாறுகிறார். முதலில், குஜராத் மாநில அரசின் சுகாதாரக் கொள்கைகளை வகுக்க நியமிக்கப்பட்ட அவர், 2012 சட்டமன்றத் தேர்தலின்போது, மோடியின் தலைமை தேர்தல் வியூக வகுப்பாளராக மாறினார். தொடர்ந்து, 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட அப்போதும் பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள் தேவைப்பட்டன.

பிரசாந்த் கிஷோர்

மோடியை இந்திய அளவில் கொண்டு சேர்த்ததில் பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு மிக அதிகம்:

அதற்காகவே சிஏஜி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் இயக்குநராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை இந்திய அளவில் கொண்டு சேர்த்ததில் பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு மிக அதிகம். அந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தது. ஆனால், தேர்தல் முடிந்த சில காலத்தில் பாஜக தலைமைக்கும் அவருக்கும் கருத்து மோதல் உண்டாக, சி.ஏஜியிலிருந்து வெளியேறினார் பிரசாந்த் கிஷோர். பாஜகவை தோற்கடிப்பதே லட்சியம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஐபேக் என்கிற புதிய நிறுவனத்தை உருவாக்கினார் கிஷோர். அந்த நேரத்தில், பீகாரில் ஐக்கிய ஜனதா தளன், பாஜக கூட்டணி முறிந்து, நிதிஷ்குமார் தனித்துப் போட்டியிட, அப்போது நிதிஷ்குமாருக்காக வேலை செய்தார் பிரஷாந்த் கிஷோர். தொடர்ச்சியாக நிதிஷ்குமார் பீகாரின் முதல்வராக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பு கிஷோருக்கு வழங்கப்பட்டது.

பிரசாந்த் கிஷோரைப் போலவே ஆதவ் அர்ஜுனா?

பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக 2020-ம் ஆண்டு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் பிரசாந்த் கிஷோர். அதேவேளை, பல மாநிலங்களில், பல்வேறு கட்சிகளுக்கு ஐபேக் நிறுவனம் தேர்தல் வேலை செய்திருக்கிறது. தொடர்ந்து, ‘ஜன் சூராஜ்’ எனும் அமைப்பை தொடங்கி நடத்திவந்த பிரசாந்த் கிஷோர், வரும் அக்டோபர் இரண்டாம் தேதி, அதைக் கட்சியாக மாற்றப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

பாஜவுக்கு தேர்தல் வேலை செய்து, ஐக்கிய தனதா தளம் கட்சியில் உயர்ந்த பொறுப்புக்கு வந்தவர் பிரசாந்த் கிஷோர். அதேபோல, திமுகவுக்கு தேர்தல் வேலை செய்து விசிகவில் துணைப் பொதுச் செயலாளராகியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. அதுமட்டுமல்ல, பிரசாந்த் கிஷோரைப் போலவே, அதிரடியான கருத்துக்களையும் பேசிவருகிறார் ஆதவ் அர்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது.