aadhav arjuna VCK PT Web
தமிழ்நாடு

"குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்படைந்தார்கள்" - விசிக ஆதவ் அர்ஜுனா கேள்வி

மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் 'வான்படை சாகச' கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

PT WEB

சோகத்தில் முடிந்த சாகச நிகழ்வு!

மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையினரின் வான் சாகசங்களைக் காண, பொதுமக்கள் லட்சக் கணக்கானோர் திரண்டனர். வெயில் சுட்டெரித்ததாலும், நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட்டநெரிசல் நிலவியதாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதில் பல பேர் மயக்கமடைந்த நிலையில், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை,அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான், திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன், பெருங்களத்தூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், தினேஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 90க்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றன. திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

’ஆம்புலன்ஸ்கள் கூட கிடைக்கவில்லை’ - விசிகவின் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் 'வான்படை சாகச' கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா தமது பதிவில், ”கொளுத்தும் வெயிலில் சுமார் பத்து லட்சத்திற்கும் மேறபட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். இந்த நிகழ்விலோ கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை.

வான்படை சாகச' கண்காட்சி

குழந்தைகளும் கர்ப்பிணி பெண்களும் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்படைந்தார்கள்:

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒருங்கு படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது. அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் முடியாத முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.

போதிய கவனம் செலுத்தாமல் போனதே இந்த உயிர் இழப்புகளுக்கு காரணம்:

இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது. அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது.

சென்னை விமான சாகச நிகழ்ச்சி - கூட்ட நெரிசல்

எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.