விசிக திருமாவளவன் - தவெக விஜய் முகநூல்
தமிழ்நாடு

"சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம்; நம்மைக் குறிவைத்தே அரசியல் சதி வலை"-திருமாவளவன் அறிக்கை சொல்வதென்ன?

திமுக உடனான கூட்டணி குறித்து சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம் என விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்கும் நிகழ்வை அரசியல் ஆக்குவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

Angeshwar G

கடந்த சில மாதங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை வைத்தே அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் கூறியது, திருமாவளவனை முதல்வர் ஆக்குவோம் என விசிகவினர் தெரிவித்தது, அண்மையில் தவெக மாநாட்டில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக விஜய் பேசியது என விசிகவை மையமிட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

விசிக திருமாவளவன் - தவெக விஜய்

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்குமா என்ற விவாதங்களும் நடந்தது. இதற்கு உதாரணமாக எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், திருமாவளவனும் விஜயும் பங்கேற்க இருப்பதாகவும், கூட்டணி உறுதி என்றும் பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம்

இந்நிலையில்தான், சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம் எனும் பெயரில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர். அண்மையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் ஆற்றிய உரையில் தம்மோடு இணையவிருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்தார். "ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்பது 'விடுதலைச்சிறுத்தைகளின் கோரிக்கை தானே; எனவே, அவர்களைக் குறிவைத்து தான் நடிகர் விஜய் பேசியுள்ளார்' என்கிற ஊகத்தில் அரசியல் தளத்தில் உரத்த உரையாடல்கள் நடந்தன. அது தவிர்க்க இயலாத ஒன்றேயாகும்.

இந்நிலையில்தான், அதற்கு எதிர்வினையாக நம் தரப்பு கருத்துகளை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டோம். எனவே, விஜய் அவர்களின் உரை குறித்து நமது நிலைப்பாடுகளை விவரிக்க நேர்ந்தது.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் பங்குண்டு. அதாவது, நாமும் சேர்ந்து உருவாக்கியது தான் நாம் அங்கம் வகிக்கும் கூட்டணி. அதனை தக்க வைப்பதும் பாதுகாப்பதும் நமக்குமான கடமைகளாகும். அதனைச் சிதறடிப்பதற்கோ சிதைப்பதற்கோ நாம் எவ்வாறு இடமளிக்க இயலும்.

நம்பகத்தன்மையை நொறுக்க முயற்சி

நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள் நீக்கம் கற்பித்து நம்பகத்தன்மையை நொறுக்க முயற்சி. உணர்ச்சிகளை தூண்டி நம்மை நிலைகுலையவைக்கும் சதி நிறைந்த முயற்சி.

தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்! இதனை யார் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் தெளிவுற புரிந்துகொள்ள வேண்டும்." என திருமாவளவன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.