விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது, ஆட்சியில் பங்கு அளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டது என திருமாவளவனின் அடுத்தடுத்த பேச்சுகள், செயல்பாடுகள் திமுக கூட்டணியில் கசப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியதாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே மது ஒழிப்பு கோரிக்கைக்காக கூட்டணியில் எந்த விளைவை எதிர்கொள்ள தயார் எனவும் திருவாரூரில் நடந்த கூட்டத்தில் பேசி அரசியல் விவாதத்தை மேலும் அதிகப்படுத்தினார்.
இந்நிலையில்தான் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து, ‘தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசமைப்புச் சட்ட உறுப்பு எண் 47ன்-படி தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்’ என்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதுஒருபுறம் இருக்க மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக விசிகவிற்கும், பாமகவிற்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன. முன்னதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவரோ, “மதுவை ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். அந்த அடிப்படையில் திருமாவளவன் எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். ஏனென்றால், இது எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை. மது ஒழிப்பில் பாமக பிஎச்டி படித்துள்ளது. திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி வந்துள்ளார்” என தெரிவித்திருந்தார்.
இந்த எல்கேஜி விவகாரத்திற்கு பதில் அளித்த திருமாவளவன், “நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பேசிய திருமாவளவன், “மது ஒழிப்பிற்கு எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது அறைகூவல். பாஜகவும் பாமகவும் மது ஒழிப்பிற்கு உடன்படுகிறார்கள், குரல் கொடுக்கிறார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. பாமக மீது எங்களுக்கு எவ்வித விமர்சனமும் கிடையாது. அவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியாத அளவிற்கு அவர்கள்தான் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுடன்தான் நாங்கள் அவர்களுக்கு கை கொடுத்தோம். 5 ஆண்டுகள் பயணம் செய்தோம்.
நாங்கள் ஒரு பெரிய சக்தியாக அன்று கிடையாது. அந்த நிலையிலும் எங்களை கடுமையாக கார்னர் செய்து, விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்பிய காரணத்தால், எங்களது உயர்நிலைக் குழுவில் நாங்கள் எடுத்த முடிவை திரும்ப திரும்ப சொல்கிறேன்” என தெரிவித்தார்.