திமுகவினரால் விசிகவுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைத்ததாக கூறும் ரவிக்குமாரின் கருத்தை ஏற்பதாக கூறியுள்ள விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, திமுகவுக்கு மட்டுமே அந்த வெற்றி கிடைத்தது என்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். உரசலில் திமுக விசிக உறவு உள்ள நிலையில், புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் ஆ.ராசா எம்.பியின் விமர்சனத்துக்கும் பதிலளித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “என் கருத்தில் எந்த விதமான தவறும் கிடையாது. எந்த விதமான பின் வாங்குதலும் இல்லை. ஜனநாயக பூர்வமான இயக்கத்தில் பயணிக்கிறேன். இதில் பின் வாங்குவதற்கு என்ன தவறான சிந்தனை இருக்கிறதென்று எனக்கொன்றும் தெரியவில்லை” என தெரிவித்தார்.
(ரவிக்குமார் கூறியது : திமுக விசிக கூட்டணி எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல. அது கொள்கை கூட்டணி. விசிக இல்லையென்றால் வட மாவட்டங்களில் திமுகவால் வெல்ல முடியாது என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்து உண்மைக்கு மாறானது மட்டுமல்ல. அரசியல் முதிர்ச்சி அற்றது. திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெல்ல விசிக உதவியது என்பது உண்மை. அதேபோல் விசிகவிற்கு 2 எம்பிக்கள் 4 எம்எல்ஏக்கள் இருப்பது திமுக உடனான கூட்டணியால்தான்)
ஆதவ் அர்ஜுனா பதில்: இந்த கருத்தில் நான் முரண்படவில்லை. தோழர் ரவிக்குமார் கருத்தில் உடன்படுகிறேன். ஒரு கூட்டணியை உருவாக்குகிறோம். கூட்டணி உருவானபின், கூட்டணி வெற்றியை ஒரு தனி கட்சி தனக்கான வெற்றி என பிரச்சாரம் செய்வது தவறான மனப்பான்மை என்பதுதான் என்னுடைய சிந்தனை.
உங்களுக்கு 2%, 1% வாக்குகள் தானே இருக்கிறது என பத்திரிக்கையாளர்கள் கேட்கின்றனர். விசிகவின் துணைப் பொதுச்செயலாளராகவும், விசிக தொண்டனுடைய இடத்தில் இருந்தும் வேலை செய்ததன் காரணமாக தரவுகளை பதிவு செய்கிறேன். 60 தொகுதிகளில் சராசரியாக விசிகவிற்கு 30 ஆயிரம் வாக்குகள் இருக்கிறது. இதிலேயே 18 லட்சம் வாக்குகள் வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 30 லட்சம் வாக்குகள் இருக்கிறது. விசிகவை சுருக்காதீர்கள். அதன் வளர்ச்சியைப் பாருங்கள்.
ஜனநாயக நாட்டில் கூட்டணி ஆட்சி உருவாக வேண்டும், உருவாக்க வேண்டும், அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணம் ஒரு கட்சியில் சாதாரண தொண்டனுக்கும் உண்டு. இதை மக்களிடம் நான் ஒரு சிந்தனையாக வைக்கிறேன். சிந்தனையே தவறு என்று கூறுவது எந்த அளவுக்கு சரி. ஜனநாயகத்தை பேசக்கூடிய திமுகவில் தோழர் ராசா அண்ணன் ஏன் வெளிப்படுத்தினார் என்பது தெரியவில்லை.
சந்திரபாபு நாயுடு கூட்டணி உருவாக்கி வெற்றி பெற்று பெருந்தன்மையாக, தன்னுடன் பயணித்த கட்சிகளுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கிறார். அமைச்சரவையை பகிர்ந்து கொள்கிறார். திமுக யாரை துணை முதலமைச்சர் ஆக்கினாலும், அது கட்சியின் உள்விவகாரம் சார்ந்தது. ஆனால், விசிகவின் கொள்கை எதிர்காலத்திற்கானது. எங்களுடைய கட்சி அதிகாரப் பரவலை நோக்கி போக வேண்டும். இதில் தவறு கிடையாது என் உரிமை” என்றார்.