இந்திய அளவில் மிகப்பெரிய அடக்குமுறையாக அடையாளம் காணப்பட்ட வாச்சாத்தி மக்கள் இன்று வரை தங்களுக்கு முழுமையான நீதி கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகே பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அறிவித்த தொகை இன்னும் கைக்கு வந்து சேரவில்லை என்கிறார்கள் வாச்சாத்தி மக்கள்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள வாச்சாத்தி பழங்குடியினர் கிராமத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து, கடந்து சென்றுவிட முடியாது. 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி வாச்சாத்திக்குள் புகுந்த வனத்துறையினர் ஒவ்வொரு வீடாக சோதனை நடத்தினர். சந்தனமரக்கட்டை கடத்தியதாக 90 பெண்கள், 28 சிறுவர்கள், 15 ஆண்கள் என 133 பேர் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டனர்.
இந்த கைது சம்பவத்திற்கு பிறகு ஊருக்குள் யாருமே வசிக்க முடியாத அளவிற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மக்கள் வளர்த்து வந்த கால்நடைகளை கொன்று, குடிநீர் கிணறுகளில் வனத்துறையினர் வீசி சென்றிருந்தனர். வீடு, உடைகள், உணவுப்பொருட்கள் என அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தன. சந்தனமரக்கட்டைகள் கடத்தப்படுவதை வாச்சாத்தி மக்கள் தடுத்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
வனத்துறை, காவல்துறை, வருவாய் துறையைச் சேர்ந்த 269 பேர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். பல போராட்டங்கள் நடத்தியும், வழக்குப்பதிவு செய்யாமல், பெயரளவுக்கு விசாரணை மட்டுமே நடைபெற்று வந்தது. 1992 ஆம் ஆண்டு வாச்சாத்தி பிரச்னையை நல்லசிவன் நாடாளுமன்றத்தில் பதிவு செய்த பிறகே, விசாரணை தீவிரமடைந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வாச்சாத்தி மக்களின் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 1995 ஆம் ஆண்டு வாச்சாத்தி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஓராண்டுக்கு பிறகு இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதன்பின், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணை மாற்றப்பட்டது. முடிவில், 2011 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 24 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் 62 லட்சம் ரூபாய் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தாமதிக்கப்பட்ட நீதி மட்டுமல்ல; தாமதித்து வழங்கப்படும் இழப்பீடும் கூட பயனில்லாமல் போய்விடும் என்பதற்கு வாச்சாத்தி துயரம் ஓர் உதாரணமாகிவிடக்கூடாது என அஞ்சுகின்றனர் இந்த மக்களுக்காக போராடியவர்கள்.