Disabled person pt desk
தமிழ்நாடு

வாணியம்பாடி | எருமை மாட்டின் மீது அமர்ந்து பயணம் செய்யும் மாற்றுத்திறனாளி முதியவர் - காரணம் இதுதான்!

வாணியம்பாடி அருகே அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை சக்கர நாற்காலி கிடைக்காததால் மாற்றுத்திறனாளி ஒருவர் எருமை மாட்டின் மேல் அமர்ந்து பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.

webteam

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ராஜா (62). பிறக்கும் போதே இரண்டு கால்களும் வளர்ச்சி குறைபாடுகளுடன் பிறந்துள்ளர். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில், ராஜாவின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது 2 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

Disabled person

மாற்றுத் திறனாளியான ராஜா, கிரிசமுத்திரம் பகுதியில் கால்நடைகளை வளர்த்து பல ஆண்டுகளாக தனிமையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை என்பதால் சக்கர நாற்காலி கேட்டு பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால், இதுவரையில் ராஜாவிற்கு சக்கர நாற்காலி வழங்கவில்லை. குறிப்பிட்ட தொலைவிற்கு மேல் நடக்க சிரமப்படும் ராஜா, அவர் வளர்க்கும் எருமை மாட்டின் மீது அமர்ந்து பயணம் செய்து தனது தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறார்.

இதையடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மூன்று சக்கர வாகனம் கேட்டு ஊராட்சி மன்ற நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் முதல் அரசுத் துறை அதிகாரிகள் வரை மனு அளித்தும் இதுவரை ராஜாவிற்கு மூன்று சக்கர வாகனம் கிடைக்கவில்லையென மன வேதனையோடு தெரிவித்தார். உடனடியாக சக்கர நாற்காலி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.