செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த முல்லை பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (35). செங்கல் சூளையில் பணியாற்றிய இவர், நேற்று பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது பெரியகுரும்ப தெரு பகுதியில் சென்ற போது, அவ்வழியாக திருப்பத்தூரில் இருந்து, வெள்ளகுட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இந்நிலையில், பிரபு உயிரிழந்து, வெகுநேரம் ஆகியும் ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் எல்லை பிரச்னையால் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடையினாலேயே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாகக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து 4 மணி நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினரை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் டாஸ்மாக் இருப்பதாலேயே இதுபோன்ற விபத்துகள் நடப்பதாகக் கூறி மரக்கட்டை மற்றும் கற்களை எடுத்துக் கொண்டு டாஸ்மாக் நோக்கி சென்றனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், உடனடியாக அப்பகுதியில் இருந்த டாஸ்மாகை மூடினர். இதைத் தொடர்ந்து சிலமணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் யுவராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.