தமிழ்நாடு

வாணியம்பாடியில் வாட்ஸ்அப் குழு மூலம் அமோகமாக நடக்கும் மது விற்பனை

வாணியம்பாடியில் வாட்ஸ்அப் குழு மூலம் அமோகமாக நடக்கும் மது விற்பனை

webteam

வாணியம்பாடியில் வாட்ஸ் அப் குழு வாயிலாக மதுவிற்பனை அமோகமாக நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

வாணியம்பாடியில் 150-க்கும் மேற்பட்டோர் இணைந்து வாட்ஸ் அப்பில் ‘சரக்குகுழு’ என்ற குழுவை ஆரம்பித்து, இதன் மூலம் 1500 க்கும் மேற்பட்டோருக்கு மது விற்பனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. வெளிமாநில மதுபானங்கள், கள்ளச்சாராயம் உட்பட அனைத்துமே இங்கு சலுகை விலையில் கிடைக்கிறதாம்.

மதுபானம் தேவையென்றால் சம்பந்தப்பட்ட நபர் வாய்ஸ் மெசேஜ் மூலம் குரூப்பில் பதிவு செய்வார். உடனடியாக குரூப் அட்மின் தங்களிடம் இருக்கும் மதுபானங்கள் மற்றும் அதன் விலையை வாய்ஸ் மெசெஜ் மூலம் பதிவு செய்வார். அதனைத்தொடர்ந்து குரூப் அட்மின் மதுபானத்தை ஒப்படைக்க குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்வார். அதன் பின்னர் மதுபானங்கள் வேண்டிய நபருக்கு சப்ளை செய்யப்படும். 

முன்னதாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முறைகேடாக மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்களை  காவலர்கள் கைது செய்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் கள்ளச்சந்தையில் விற்கமுயன்ற 5000த்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயில், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்து மது விற்பனை செய்த 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாட்ஸ் மூலம் மதுவிற்பனை நடைபெறுவதால், காவல்துறையினர் அவர்களை பிடிக்கத் திணறி வருவதாகச் சொல்லப்படுகிறது.