குழந்தை பெற்றுக் கொள்வது குறித்தும், குழந்தை இல்லாமை குறித்தும், பெண் குழந்தை பிறப்பது குறித்தும் இந்திய சமூகத்தில் அறியாமை அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக குழந்தையின்மை குறித்து பெரிய அளவிற்கு விழிப்புணர்வு இல்லை. குழந்தை இல்லையென்றால் சமூகத்தினர் தம்பதியரை மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது அந்த தம்பதியருக்குள் பிரச்னைகள் வர காரணமாகி வருகிறது. குழந்தை பிறக்கவில்லை என்பது அவர்களை எப்படி குற்றவாளிகள் ஆக்க முடியும். தேவையான மருத்து சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளலாம், அதனையும் தாண்டி நடக்காவிட்டால் அதற்கு அவர்களுக்கு ஏன் தண்டனை கொடுக்க வேண்டும். அப்படியான சூழலில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவை எடுத்துள்ள சோகமான சம்பாம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்துள்ளது.
வாணியம்பாடி அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (35). இவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லையென கூறப்படுகிறது.
இதனால் சங்கர் மற்றும் அவரது மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சங்கரின் மனைவி சங்கருடன் சண்டையிட்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் மனவிரக்தியில் இருந்த சங்கர் அவரது சொந்த கிராமமான வளையாம்பட்டு பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.