தமிழ்நாடு

வாணியம்பாடி: பேரூராட்சி கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தியதாக அதிமுக உறுப்பினர் மீது புகார்

வாணியம்பாடி: பேரூராட்சி கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தியதாக அதிமுக உறுப்பினர் மீது புகார்

webteam

வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் நாற்காலிகள் மற்றும் தீர்மான புத்தகத்தை சேதப்படுத்திய அதிமுக பேரூராட்சி உறுப்பினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சியில் நேற்று கூட்டம் நடைபெற்றுது. இதில் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டார். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது 2-வது வார்டு அதிமுக உறுப்பினர் பரிமளா என்பவரின் கணவர், பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வெளியில் இருந்து சத்தம் போட்டார்.

இதனால் திமுக உறுப்பினர்கள் வெளியில் இருப்பவர் சத்தம் போடுகிறார் அவரை வெளியேற்றும்படி கூறியதால் அதிமுக பேரூராட்சி உறுப்பினர்களுக்கும் திமுக பேரூராட்சி உறுப்பினர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென அதிமுக 1-வது வார்டு உறுப்பினர் சரவணன் நாற்காலிகள் மற்றும் தீர்மான புத்தகங்களை எடுத்து வீசி உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது மேலும் கூட்டத்தை நடத்தக் கோரி அதிமுக பேரூராட்சி உறுப்பினர்கள் பேரூராட்சி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து 1 மணி நேரத்திற்குப் பிறகு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் அதிமுக 1-வது வார்டு உறுப்பினர் சரவணன் கூட்ட அரங்கில் இருந்த தீர்மான புத்தகம் மற்றும் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தியதாக உதயேந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி, வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.