பயிர்களை தாக்கும் வண்டு PT
தமிழ்நாடு

‘என் தலைமுறையில் கடைசி விவசாயி நான்’ பயிர்களை அழிக்கும் கருப்பு வண்டு; வேதனையில் விவசாயி!

வந்தவாசி அருகே நெற்பயிரில் கருப்பு வண்டு தாக்குதல் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயி வேதனை. “என் தலைமுறையில் நானே கடைசி விவசாயி” என புலம்பியுள்ளார் அந்த விவசாயி.

PT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மேல் கொடுங்காலூர் கிராமத்தில் நெற்பயிரில் கருப்பு வண்டு தாக்குதல் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயி வேதனை.

வந்தவாசியை அடுத்த மேல் கொடுங்காலூர் கிராமத்தில் விவசாயி சுந்தரமூர்த்தி என்பவர் சுமார் 4க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து கடந்த சில ஆண்டுகளாக பயிர் தொழில் செய்து வருகிறார். 4 ஏக்கரிலும் பொன்னி நெற்பயிர் பயிரிட்டு பராமரிப்பு பணிகள் செய்து வருகின்றார் இவர்.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக கருப்பு நிற வண்டுகள் நெற்பயிரில் ஊடுறுவி பயிரை சேதம் செய்வதாக வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருக்கிறார். அதையடுத்து வேளாண்மை துறை அலுவலர்கள் நேரில் சென்று நெற்பயிர்களை பார்வையிட்டனர்.

பின் கூறிய வேளாண்துறை அலுவலர் "இதை தமிழில் கருப்பு வண்டு என்றும், ஆங்கிலத்தில் பிளாக் பக் (BLACK BUG) என்றும் அழைப்பர். இவை பயிர் வைத்திருக்கும் பகுதியை சுற்றியுள்ள காலியாக உள்ள பயிர் வைக்கப்படாத நிலங்களான கரம்பு பகுதிகளில் அதிகமாக காணப்படும். அருகில் பயிர் வைத்தவுடன் கரம்பிலிருந்து பயிரில் ஏறிவிடும். ஆனால் இங்கு நடந்தது வழக்கமில்லாத நிகழ்வு. இதனால் அதிக பாதிப்பு இல்லை. இதற்கு ஜிங் சல்பேட் மற்றும் எம் என் மிக்ஸர் ஆகியவை கலந்து போடுங்கள். எந்த வித பாதிப்பும் வராது" என அறிவுறுத்தினர்.

சம்பந்தப்பட்ட விவசாயி, "பயிரை காக்க பலரிடம் போராடி கடனை வாங்கி எலி, காட்டுப்பன்றி, ஆகியவற்றிலிருந்து பயிரை காப்பாற்றி தற்போது புதிய வகை கருப்பு வண்டு எங்களை கலங்க வைக்கிறது. விவசாயத்தை தவிர வேறொன்றும் எங்களுக்குத் தெரியாது. என் தலைமுறையில் கடைசி விவசாயி நான். எல்லா உழைப்புக்கும் ஊதியத்தை உரியவனே நிர்ணயம் செய்யும் இக்காலத்தில் விவசாயிக்கு மட்டும் உரிய விலை நிர்ணயம் செய்யும் தகுதி இல்லை" என வேதனை தெரிவித்தார்.