Protest pt desk
தமிழ்நாடு

”கலியுக அம்பேத்கரே! வருக.. வருக” - அண்ணாமலையை வரவேற்று பாஜகவினர் வைத்த பேனர் எதிர்ப்பால் அகற்றம்!

வந்தவாசியில், ’கலியுக அம்பேத்கரே வருக வருக’ என அண்ணாமலையை வரவேற்று பாஜகவினர் வைத்த பேனருககும் கடும் எதிர்ப்பு. கட்சிகளின் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Kaleel Rahman

செய்தியாளர்: ஆஜாசெரிப்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் நடைபெற உள்ள ’என் மண் என் மக்கள் யாத்திரை’க்காக வரும் 5ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகை தர உள்ளார். அவரை வரவேற்றும் விதமாக பாஜக நிர்வாகிகள் வந்தவாசியில் ஆங்காங்கே வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர்.

Flex banner

இந்நிலையில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட பேனரில், வந்தவாசி தொகுதி யாத்திரைக்கு வருகை தரும் கலியுக அம்பேத்கரே வருக வருக என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்று வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து இந்த பேனருக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய குடியரசு கட்சி மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் பாஜகவினருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி புரட்சி பாரதம் மற்றும் இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினரால் வைக்கப்பட்ட பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Protest

தகவலறிந்த அங்கு வந்த வந்தவாசி டிஎஸ்பி ராஜு மற்றும் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.