mla vanathi srinivasan pt desk
தமிழ்நாடு

“அது தப்பில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போடுவதும் தப்பில்லை” – வானதி சீனிவாசன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியின்போது ரசிகர்கள் மத்தியில் ஒலித்த 'ஜெய்ஸ்ரீராம்' கோஷம் விமர்சனத்தை எழுப்பிய நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதற்கு தனது ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளார்

webteam

13 வது ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடர், இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 14 ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை பாகிஸ்தானுடன் தோற்றதில்லை என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொண்டது. இது ஒருபுறமிருக்க இந்த போட்டியின் முடிவில் பல விமர்சனங்களும் எழுந்தது.

ind pak match

ஏற்கெனவே பாகிஸ்தான் வீரர்களுக்கு மாட்டிறைச்சி உணவு அனுமதிக்கப்படாதது, அந்நாட்டு ரசிகர்களுக்கு விசா வழங்கப்படாதது என தொடர்ந்து சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தன. அடுத்து மேக் மை ட்ரிப் (Make My Trip) நிறுவனம் வெளியிட்ட விளம்பரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படி தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டியின்போது கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் போட்டியன்று, மைதானத்தில் ஜெய் ஶ்ரீராம் பாட்டு போட்டது முதல் அந்நாட்டு வீரர்களை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என ரசிகர்கள் கோஷமிட்டது வரை தற்போது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இதற்கு கிரிக்கெட் வல்லுநர்கள், திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

pak team

இந்நிலையில் இன்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்திப்பின் போது இவ்விவகாரத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “ஜெயிக்க வேண்டுமென மைதானத்தில் இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போடுவதும் தப்பில்லை. இது தப்புன்னா எல்லாத்தையும் தப்புன்னு சொல்லுங்க. இது ரைட்டுன்னா எல்லாத்தையும் ரைட்டுன்னு சொல்லுங்க.

இதை அரசியலாக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் யார்? விளையாட்டை அரசியலாக பார்க்கக் கூடாதென்று நினைப்பவர்கள் இதை அரசியலாக பார்க்கக் கூடாது. இதை நீங்கள் அரசியல் பண்ணனும் என்றால் நியாயமாக அரசியல் பண்ணுங்க” என்றார்.