நீலகிரி மாவட்டத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையை நிபுணர் குழு அறிக்கையை விரைவாக பெற்று வனத்திற்குள் விடவேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பண உதவியும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஏழை மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது. இதில் தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் , மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ப்ரீத்தி லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்பு பேசிய வானதி ஸ்ரீனிவாசன், "நீலகிரி மாவட்டம் கூடலூர் மசினகுடி பகுதியில் வனத்துறையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள ரிவால்டோ யானையை விடுவிக்கக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளதாக சுட்டிக்காட்டினார். நிபுணர்கள் குழுவின் அறிக்கையைப் பெற்று யானையை விரைவாக வனத்திற்குள் விடவேண்டும்” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு ஏற்படுகிறது. ஆனால் அந்தப் பழியை அனில்மீது போட்டுவிட்டார்கள் என்றும் கூறினார். மேலும், பொதுமுடக்கத்தால் ஆன்லைன் வகுப்புகளை சார்ந்துள்ள மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க வழிவகுக்க வேண்டும் என்றார்.
மேலும், எவ்வளவு விரைவாக தமிழக அரசு தடுப்பூசி போடுகிறதோ அந்தளவிற்கு தடுப்பூசிகள் கொடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியதை சுட்டிக்காட்டியவர், மக்களுக்கு தடுப்பூசி தொடர்பான தெளிவான தகவல்கள் இல்லையென்றார். மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து விலையை குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.