சென்னை வேப்பேரியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஓபிஎஸ் அணியின் தலைமை கழகம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம்,வெல்லமண்டி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “6 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. நம்முடைய நிலை என்ன என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள். அதற்கு பதில் சொல்வதற்குத் தான் இந்த கூட்டம்.
2 கோடியே 40 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம் என கூறினார்கள். அதில் கால் சதவீதம் இன்று கூடி உள்ளனர். 30 லட்சம் பேர், 15 லட்சம் பேர், 10 லட்சம் பேர் கூடுவார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், 70 ஆயிரம் நபர்கள் கூட இன்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என போலீஸ் ரிப்போர்ட் கூறுகிறது. 100 கோடி ரூபாய் செலவு செய்து 70 ஆயிரம் நபர்களைக் கூட கூட்ட முடியாமல் 'வீர எழுச்சி மாநாடு' என பெயர் வைத்து வீழ்ச்சி மாநாடாக ஓடிக்கொண்டிருக்கிறது.
புரட்சி தலைவர், புரட்சி தலைவி என பட்டம் கொடுத்ததற்கு ஒரு வரலாறு உண்டு. புரட்சி தமிழர் என பட்டம் கொடுத்து உள்ளனர். தமிழ் என ஒழுங்காக உச்சரித்து விட்டால் நான் அரசியலில் இருந்து விலகி கொள்கிறேன். தமிழ் மக்களுக்காக உயிர் இழந்த பிரபாகரன் புரட்சி தமிழன். கொலை செய்துவிட்டு காட்டில் ஒளிந்து கொண்டிருந்த இவர் எப்படி புரட்சி தமிழர் ஆனார்.
எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு வந்ததே 1989 ஆம் ஆண்டில் தான். எம்.ஜி.ஆரை தெரியாது, அண்ணா பேச்சைக் கேட்டதில்லை. காலத்தின் கோலம் கட்சியின் மூத்த முன்னோடிகளெல்லாம் பணத்தாசை பிடித்து எடப்பாடி பழனிசாமி பின்னால் நின்றுகொண்டுள்ளார்கள். சரியான வேட்பாளரை திமுக போட்டால் எடப்பாடி பழனிசாமி எடப்பாடியில் கூட வெற்றி பெற முடியாது.
காலத்தின் கோலத்தால் முதலமைச்சராகி கட்சியை அபகரிக்கத் துடிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவுக்கு அடி கொடுக்க வேண்டும். அதற்கு ஓபிஎஸ் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப நிர்வாகிகளை ஒரு மாதத்திற்குள் நியமனம் செய்ய வேண்டும்.
வருகின்ற தேர்தல் நம்முடைய தலைவிதியை நிர்ணயம் செய்யும் ஒரு தேர்தல். எனவே மாவட்ட நிர்வாகிகளை ஒரு மாதத்தில் நியமனம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். ஓபிஎஸ் இல்லாமல் தனித்து யாராலும் வெற்றி பெற முடியாது” என்றார்.