தமிழ்நாடு

வடபழனி டூ அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யத் திட்டம் - எந்த வழியாக செல்லலாம்?

வடபழனி டூ அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யத் திட்டம் - எந்த வழியாக செல்லலாம்?

சங்கீதா

சென்னை வடபழனி 100 அடி சாலையில் சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில் நாளை 09.07.2022 முதல் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

100 அடி சாலை 2-வது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து 4-வது நிழற்சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அசோக் பில்லர் வழியாக இருந்து கோயம்பேடு, வடபழனி மற்றும் கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம் போலச்செல்லலாம். அசோக்பில்லர் வழியாக இருந்து தி.நகர் மற்றும் கோடம்பாக்கம் நோக்கிச்செல்லும் வாகனங்கள் 2-வது நிழற்சாலைச் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, 4-வது நிழற்சாலை மற்றும் அம்பேத்கர் சாலை வழியாக செல்லலாம்.

கோயம்பேடு மற்றும் வடபழனி வழியாக அசோக் பில்லர் நோக்கிச்செல்லும் வாகனங்கள் 2-வது நிழற்சாலைச் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, 4-வது நிழற்சாலை வழியாக சென்று கவிஞர் சுரதா சிலை அருகில் 100 அடி சாலையினை அடைந்து அசோக்பில்லர் நோக்கிச்செல்லலாம்.

வடபழனியிலிருந்து தி.நகர் செல்லும் வாகனங்கள் 2-வது நிழற்சாலைச் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி 4-வது நிழற்சாலை வழியாக தி.நகர் அடையலாம். பி.டி.ராஜன் சாலை - பி.வி.இராஜமன்னார் சாலை சந்திப்பிலிருந்து 2-வது நிழற்சாலை -100 அடி சாலை வரை தற்பொழுதுள்ள ஒரு வழிப்பாதை மாற்றப்பட்டு இருவழி பாதையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

பி.டி.ராஜன் சாலை - ராஜமன்னார் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் நேராக 2வது நிழற்சாலை - 100அடி சாலையினை அடைந்து நேராக 2-வது நிழற்சாலை வழியாக தி.நகர் மற்றும் அசோக்பில்லர் செல்லலாம். வடபழனி மார்கத்திலிருந்து கே.கே.நகர் செல்ல விழையும் வாகனங்கள் 2-வது நிழற்சாலைச் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி 4-வது நிழற்சாலை வழியாக 3-வது மற்றும் 6-வது நிழற்சாலை அடைந்து 100அடி சாலையில் வலது புறம் திரும்பி கே.கே.நகரினை பி.டி. ராஜன் சாலை வழியாக அடையலாம்.

கோடம்பாக்கம் மற்றும் தி.நகர் மார்கத்திலிருந்து வடபழனி மற்றும் கோயம்பேடு செல்ல விழையும் வாகனங்கள் 4வது நிழற்சாலை வழியாக, 3வது மற்றும் 6வது நிழற்சாலை வழியாக 100அடி சாலை வலதுபுறம் திரும்பி செல்லவேண்டிய வழித்தடத்தில் செல்லலாம். பொதுமக்கள் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.