காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை - தென்கலை மோதல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

காஞ்சிபுரம் | ‘யார் முதலில் பாடுவது..?’ - கொலை மிரட்டலில் முடிந்த வடகலை, தென்கலை மோதல்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல ஆண்டுகளாக தொடரும் வடகலை தென்கலை பிரச்னை, தற்போது கைகலப்பாக மாறி அடிதடி, கொலை மிரட்டல் அளவுக்கு சென்ற கொடூரம்.

PT WEB

செய்தியாளர்: இஸ்மாயில்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திகழ்கிறது. தற்போது உலகமெங்கும் அத்திவரதர் கோவில் என பிரசித்து பெற்றுவிட்டது இத்திருத்தலம்.

ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் நடைபெறும் பார்வேட்டை திருவிழாவில் இந்த வரதராஜபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்

அப்படி இந்த வருடமும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை, அய்யன்பேட்டை, கருக்கு பேட்டை, திம்மராஜம்பேட்டை, கீழ் ஒட்டிவாக்கம், வெண்குடி, வாலாஜாபாத், புளியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலையின் மீது எழுந்தருளினார்.

சுவாமி பார்வேட்டைக்கு வரும்போது வடகலை தென்கலை சார்ந்த கோஷ்டிகள் திவ்ய பிரபஞ்சம் பாடி வருவது தொன்றுதொட்டு வருகிறது. இதில் வடகலை தென்கலை பிரிவினர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக ‘யார் முதலில் திவ்ய பிரபஞ்சம் பாடுவது’ என்ற பிரச்னை தொடர்கதையாக உள்ளது. இதுதொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் பல ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.

இந்தப் பிரச்னைக்கு தற்காலிகமாக சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்தது. அதன்படி, இருபிரிவினருமே இக்கோவிலில் திவ்ய பிரபஞ்சம் பாட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கு மாற்றாக தோஸ்த்ர பாடம் எனப்படும் சமஸ்கிருத பாடல்கள் பாடப்பட்டு வருகிறது.

சென்னை உயர்நீதிமன்றம்

அதன்படி நேற்றும் அப்பாடல் பாடப்பட்டது. ஆனால் அப்போதும் வடகலை தென்கலை பிரச்னை மீண்டும் எழுந்துவிட்டது. இதில் வடக்கலை தென்கலையினருக்குள் முதலில் வாய் சண்டை ஏற்பட்டது. அது சற்று நேரத்தில் தள்ளுமுள்ளாக மாறி கடைசியில் அடிதடியில் முடிந்தது. ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினரை விரட்டி விரட்டி தாக்குவதும், அவர்கள் தப்பி ஓடுவதும் அங்கிருந்த பக்தர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு இரு பிரிவினரும் சென்று விட்டனர்.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பாரிவேட்டை திருவிழாவில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவர்.

அப்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று வந்திருந்த பக்தர்கள், “அந்த தேவராஜ பெருமாளே வந்தால் கூட இவர்களின் இந்தப்பிரச்னையை முடிக்க இயலாது போல. இவர்களின் சண்டையினால் நாங்கள் சாமியை தரிசனம் செய்வது தடைபட்டுவிட்டது” என வேதனையுடன் கூறினர்.

வடகலை தென்கலை பிரிவினரின் சண்டை பக்தர்களிடையே முகசுச்ழிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி, பேசு பொருளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் நிலையத்தில் வடகலை பிரிவினர், தென்கலை பிரிவினர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது சாலவாக்க போலீசார் CSR பதிவு செய்துள்ளனர்.