புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக மலேசியாவில் சிக்கியுள்ள இளைஞரை மீட்டு நாளை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மலேசியாவில் வேலை செய்துவரும் தன்னை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகையை சேர்ந்த நந்தக்குமார் என்பவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகே உள்ள பெரிய குத்தகை கிராமத்தை சேர்ந்த நந்தக்குமார், கடந்த 12 ஆம் தேதி மலேசியாவில் உள்ள கோமதி உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். உறுதியளித்தபடி உரிய பணிகளை வழங்காமல் வேறு பணிகளை கொடுத்த தன்னை துண்புறுத்துவதாக நந்தக்குமார் வேதனை தெரிவித்திருந்தார். உடல் நலம் சரியில்லாத நேரத்திலும் ஹோட்டல் நிர்வாகம் ஊருக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை என ஆடியோ வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்த செய்தியை புதியதலைமுறை வெளியிட்டது. இந்நிலையில் மலேசியாவில் சிக்கியுள்ள இளைஞரை மீட்டு நாளை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் ட்வீட் செய்துள்ளார்.