கும்பகோணத்தில் கந்துவட்டி பிரச்னையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். இவர் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் 7 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதற்கு வட்டியுடன் சேர்த்து 45 லட்ச ரூபாய் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கடன் அளித்தவரின் ஆட்கள் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் சிவசுப்ரமணியன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வீடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து மீண்டும் கடன் அளித்தவர்களின் ஆட்கள் சிவசுப்ரமணியனின் வீட்டிற்கு வந்து அவரது மகள்கள் குறித்து தரகுறைவாக பேசியதாகவும் அதனை அவரது மகனான, பொறியியல் கல்லூரி மாணவர் அருண் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல், மளிகைக் கடையில் இருந்த அருணை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்றது.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் செந்தில் என்பவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இதுதொடர்பாக இருவர் தேடப்பட்டு வருகின்றனர். முன்னதாக, இந்தக் கும்பல் அருணின் வீட்டினை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவதாக மிரட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.