கொலை செய்யப்பட்ட அய்யர்பாண்டி புதிய தலைமுறை
தமிழ்நாடு

உசிலம்பட்டி | கோயில் கிடா வெட்டில் ஏற்பட்ட தகராறு... அண்ணன் மகனை கொலை செய்துவிட்டு தப்பித்தவர் கைது!

உசிலம்பட்டி அருகே கோயில் கிடா வெட்டின் போது ஆட்டின் தலைக்காக ஏற்பட்ட தகராறில் மது போதையில் அண்ணன் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

webteam

செய்தியாளர்: பிரேம்குமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர்பாண்டி. விவசாய கூலி தொழிலாளியான இவரது தந்தை அய்யங்காளை அந்த கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வக் கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.

இந்த கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கிடா வெட்டி பூஜைகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு கிடா வெட்டி பூஜை செய்யும் போது வெட்டப்படும் ஆட்டின் தலை மற்றும் கால்களை கோயில் பூசாரிக்கு காணிக்கையாக வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.

கோயில்

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இந்தக் கோயிலில் சில பக்தர்கள் கிடா வெட்டி பூஜைகள் செய்துள்ளனர். அப்போது பூசாரி அய்யங்காளை வெளியே சென்றிருந்தால், ஆட்டின் தலை மற்றும் கால்களை அவரது தம்பியான பெரிய கருப்பனிடம் பக்தர்கள் கொடுத்தாகக் கூறப்படுகிறது. பூசாரிக்கு கொடுக்க வேண்டிய காணிக்கையை அவரது தம்பியிடம் கொடுத்தது குறித்து பூசாரி அய்யங்காளையின் மகன் அய்யர்பாண்டி சம்பந்தப்பட்ட தன் சித்தப்பா பெரிய கருப்பனிடமே கேட்டுள்ளார்.

பின் சமரசத்துக்கு வந்த அய்யர்பாண்டி, பெரிய கருப்பனோடு சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் ஆத்திரமடைந்த பெரிய கருப்பன், தனது அண்ணன் மகனான அய்யர்பாண்டியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் தலை, உடல் உள்ளிட்ட 5 இடங்களில் பலத்த காயமடைந்த அய்யர்பாண்டியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அய்யர்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொலை செய்யப்பட்ட அய்யர்பாண்டி உடல்

தகவலறிந்து விரைந்து வந்த எழுமலை காவல்நிலைய போலீசார், அய்யர்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய பெரிய கருப்பனை தேடி வந்தனர். இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள தனது மகள் வீட்டில் பதுங்கி இருந்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய பெரிய கருப்பனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.