தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட 62 இடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மார்ச் 4ஆம் தேதி நடத்தப்பட்ட மறைமுகத் தேர்தலின்போது பல்வேறு காரணங்களால், 62 பதவியிடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. விடுபட்ட இந்த 62 பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. அதில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆகிய ஊர்களில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. திருமங்கலம் நகராட்சியில் நகரமன்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலை பெரும்பாலான வார்டு கவுன்சிலர்கள் புறக்கணித்ததால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஆம்பூர நகராட்சியில் மறைமுக தேர்தல் நடைபெற்றபோது திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் ரகளை ஈடுபட்டதால் அங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இது தவிர பூந்தமல்லி, பண்ருட்டி, வால்பாறை, திருமங்கலம், உசிலம்பட்டி, ஆம்பூர் உள்ளிட்ட 11 ஊர்களில் நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. குற்றாலம் உள்ளிட்ட 46 பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டம் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.