சுவர் ஏறி குதிக்கும் பெண்கள்  புதியதலைமுறை
தமிழ்நாடு

ஆட்சியர் உத்தரவிட்டும் அகற்றப்படாத தீண்டாமை சுவர்.. அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக புகார்!

ஒடுக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்தும் வகையில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர்.. 20 ஆண்டுகளாய் நீடிக்கும் அவலம்.. சுவர் ஏறி குதிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள்.. ஆட்சியர் உத்தரவிட்டும் அகற்றப்படாமல் இருக்கும் கொடூரம்!! எங்கு நடந்தது? முழுமையாக பார்க்கலாம்

PT WEB

செய்தியாளர் - சுரேஷ்குமார்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா சேவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட தேவேந்திரன் நகர் பகுதிக்கும் - விஐபி கார்டன் குடியிருப்புக்கும் நடுவே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐந்து அடி உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட இந்த தீண்டாமை சுவரால், தேவேந்திரன் நகர் பகுதியில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தனிமைப்படுள்ளனர்.

தீண்டாமை சுவர் - சுவர் ஏறி குதிக்கும் சிறுவன்

மேலும், இந்த தடுப்புச் சுவர் காரணமாக, பிரதான சாலைக்கு வருவதற்கு எளிதாக உள்ள பஞ்சாயத்து சாலைகளை, தேவேந்திரன் நகரில் வசிக்கும் மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரதான சாலைகளுக்கு செல்வதற்கு அரை கிலோ மீட்டர் வரை சுற்றி சென்றும், சுவற்றை ஏறி இறங்கியும் தங்களது அன்றாட பணிகளை அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.

இந்த அவலம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் சுவற்றை இடிக்குமாறு ஆட்சியரும் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், தீண்டாமை சுவரை அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் அளிக்கின்றனர்.

மேலும், தேவேந்திரன் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் நியாய விலை கடைக்கு செல்லவும், பிரதான சாலைக்கு செல்லவும் விஐபி கார்டன் வழியாக பயணிப்பது எளிதாக அமைகிறது. ஆனால் தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் இவர்கள் சுவற்றை ஏறி இறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இளைஞர்கள், பெண்கள் என்று ஆண்களும், பெண்களும் வயது வித்தியாசமின்றி, சுவற்றை ஏறி குதித்து செல்லும் அவல நிலையும் நீடிக்கிறது.

ஆட்சியர் உத்தரவிட்ட நிலையிலும் சுவர் அகற்றப்படாததால், அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் கேட்டபோது, “ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கின்ற நிலையில், ஒரு சிலர் வழக்கு தொடுத்துள்ளதால், அரசு வழக்கறிஞரின் கருத்துக்காகவும், கருத்துருவுக்காகவும் காத்திருக்கிறோம்” என தெரிவித்தார். அதை அவர் அளித்தவுடன் சுவர் அகற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதற்கிடையே, விஐபி கார்டன் குடியிருப்போர் சங்கத்தினரிடம் கேட்ட போது, “ஆட்சியரின் உத்தரவு தொடர்பாக அவரிடமே மேல்முறையீடு செய்துள்ளோம். எங்கள் தரப்பையும் விசாரித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்” என தெரிவித்தனர்.